/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு... கிரீன் சிக்னல்!: இடைக்கால தடையை நீக்கியது ஐகோர்ட்
/
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு... கிரீன் சிக்னல்!: இடைக்கால தடையை நீக்கியது ஐகோர்ட்
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு... கிரீன் சிக்னல்!: இடைக்கால தடையை நீக்கியது ஐகோர்ட்
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு... கிரீன் சிக்னல்!: இடைக்கால தடையை நீக்கியது ஐகோர்ட்
UPDATED : நவ 13, 2025 04:17 AM
ADDED : நவ 13, 2025 04:12 AM

தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது.
நோட்டீஸ் இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, தர்மஸ்தலாவின் உஜ்ரே கிராமத்தை சேர்ந்த ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா ஆகியோருக்கு எஸ்.ஐ.டி., நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், இவர்கள் நான்கு பேரும் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால், இவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்டது.
இதனிடையே இவர்கள் நான்கு பேரும் தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
மறுப்பு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய முடியாது. எஸ்.ஐ.டி., விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது' என, கடந்த மாதம் 30ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
நான்கு பேரின் மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பு கூடுதல் வக்கீல் ஜெகதீஷ் வாதிட்டதாவது:
மனுதாரர்களுக்கு கடந்த காலங்களில் பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. முந்தைய காலங்களில் அவர்கள் சாட்சியங்களாக ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது, அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக கருதப்பட்டு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவ்வழக்கில் எஸ்.ஐ.டி.,க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவில்லை என்றால் வழக்கின் உண்மை வெளிவருவது தடைபடும். எனவே, நீதிமன்றம் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காத்திருப்பு மனுதாரர் தரப்பு வக்கீல் எஸ்.பாலன் வாதிட்டதாவது:
என் மனுதாரர்களுக்கு எஸ்.ஐ.டி.,யினர் நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராகுமாறுசம்மன் கொடுக்கவில்லை. வாட்ஸாப், மின்னஞ்சல் மூலமாகவே சம்மன் அனுப்பி உள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பானது. என் மனுதாரர்கள் சாட்சியோ, குற்றஞ்சாட்டப்பட்டவர்களோ அல்ல.
அவர்களுக்கு அரசியல், பகை காரணமாக சம்மன் அனுப்பப்படுகிறது. இதுவரை அவர்களுக்கு 10 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணைக்கு வந்தால் கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மனுதாரர்கள் மீது எஸ்.ஐ.டி.,யினர் புதிய பிரிவுகளில் வழக்கை சேர்த்துக் கொண்டு செல்கின்றனர். எனவே, எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகமது நவாஸ், தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். அதுபோல, விசாரணைக்கு ஆஜராகும் மனுதாரர்களை அடித்து துன்புறுத்த தடை விதித்தார். 'மனுதாரர்கள் கட்டயாம் விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் தர்மஸ்தலா விவகாரத்தில் எஸ்.ஐ.டி., விசாரணை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

