மோசடி செய்த சிவானந்த நீலண்ணவர் ரூ.427 கோடி மதிப்பு சொத்து 'ஜப்தி'
மோசடி செய்த சிவானந்த நீலண்ணவர் ரூ.427 கோடி மதிப்பு சொத்து 'ஜப்தி'
UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:54 PM

பெங்களூரு: பொது மக்களுக்கு அதிக லாபம் ஆசை காண்பித்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுருட்டிய, சிவானந்த நீலண்ணவரின், 427 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, ஈ.டி., அதிகாரிகள் 'ஜப்தி' செய்தனர்.
பெலகாவி நகரில் 'சிவம் அசோசியேட்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தவர் சிவானந்த நீலண்ணவர். இவர் தன் நிறுவனத்தில், முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக, ஆசை காண்பித்தார். இதை நம்பிய ஆயிரக்கணக்கானோர், அவரிடம் முதலீடு செய்தனர்.
சட்டவிரோதமாக இவர் மக்களிடம் முதலீடு வசூலிப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்; பண பரிமாற்றத்தை கவனித்தனர்.
நடப்பாண்டு மே மாதம், மாளமாருதி போலீசார், சிவானந்த நீலண்ணவரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி, முக்கியமான ஆவணங்களை கைப்பற்றினர். இவற்றை ஆய்வு செய்ததில், அவர் 35,000க்கும் மேற்பட்டோரிடம், முதலீடு வசூலித்திருப்பதும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. போலீசாரும் அவரை கைது செய்தனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதால், ஈ.டி., அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.
ஆகஸ்டில், பெலகாவி, சிக்கோடி உட்பட சிவானந்த நீலண்ணவருக்கு சொந்தமான எட்டு இடங்களில் சோதனை நடத்தினர். ஆவணங்களை ஆய்வு செய்ததில், பொது மக்களிடம், 2,459 கோடி ரூபாய் வசூலித்திருப்பதும் தெரிந்தது. அதன் பின் ஈ.டி., போலீசார், சிவானந்த நீலண்ணவரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர்.
அக்டோபர் 9ம் தேதியன்று, மங்களூரின் பி.எம்.எல்.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மக்களிடம் வசூலித்த பணத்தை, பல்வேறு பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருப்பது, 25 கோடி ரூபாயை, இரண்டு கூட்டுறவு கிரெடிட் சொசைட்டிகள் மூலமாக, பரிமாற்றம் செய்திருப்பது குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டது.
இவரது மனைவி சங்கீதா, மகன் சித்தாந்த் வங்கி கணக்குகளுக்கும், பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிவானந்த நீலண்ணவரிடம், ஈ.டி., அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இதற்கிடையே அவருக்கு சொந்தமான பங்களா, விவசாய நிலம் உட்பட 427 கோடி ரூபாய் சொத்துகளை, ஈ.டி., அதிகாரிகள் 'ஜப்தி' செய்துள்ளனர்.
