பத்திரிகையாளர்கள் என மிரட்டி பணம் பறித்த ஆறு பேர் கைது
பத்திரிகையாளர்கள் என மிரட்டி பணம் பறித்த ஆறு பேர் கைது
UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 07:32 PM

வித்யாரண்யபுரா: பத்திரிகை நிருபர்கள் என மிரட்டி, ‘ஸ்பா’ எனும் உயர்ரக மசாஜ் சென்டரில் பணம் பறித்த, பெண்கள் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு வித்யாரண்யபுராவில் உள்ள ஸ்பாவுக்கு, கடந்த 11ம் தேதி, நான்கு பெண்களும், இரண்டு ஆண்களும் சென்றனர். வரவேற்பு அறையில் இருந்த ஊழியரிடம், ‘நாங்கள் பத்திரிகை நிருபர்கள். இங்கு சட்டவிரோதமாக சம்பவம் நடப்பதாக புகார் வந்துள்ளது. அதை விசாரிக்க வந்துள்ளோம்’ என்றனர்.
அதற்கு, ‘ அப்படி எதுவும் இங்கு தவறாக நடக்கவில்லை’ என்று ஊழியர் கூறினார். கோபம் அடைந்த ஆறு பேரும், ஊழியரை சரமாரியாக தாக்கி, 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டி சென்றனர்.
இதுகுறித்து, அந்த ஸ்பா உரிமையாளர், வித்யா ரண்யபுரா போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்தது.
வித்யாரண்யபுராவின், ஈரம்மா, 45, பிரியா, 40, மமதா, 38, சகாயமேரி, 42, யோகபாபு, 35, முகமது ஆசிப், 32, ஆகிய ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார், பைக், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பத்திரிகை நிருபர்கள், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று, ஆறு பேரும் போலி அடையாள அட்டைகள் தயாரித்து வைத்திருந்தனர். இதை பயன்படுத்தி உயர்தர ஸ்பாக்களுக்கு சென்று, சட்ட விரோதமாக நடப்பதாக கூறி, மிரட்டி, உரிமையாளர்களிடம் இருந்து, பணம் பறித்தது விசாரணையில் தெரிந்தது.
இந்த கும்பலில் வேறு யாரும் உள்ளனரா என்றும் விசாரணை நடக்கிறது.
