ஜெயநகரில் 'ஸ்மார்ட் பார்க்கிங்' விரைவில் அறிமுகம்: கமிஷனர்
ஜெயநகரில் 'ஸ்மார்ட் பார்க்கிங்' விரைவில் அறிமுகம்: கமிஷனர்
ADDED : செப் 17, 2026 11:14 PM

ஜெயநகர்: ''பெங்களூரு ஜெயநகரில் ஏ.ஐ., அடிப்படையிலான 'ஸ்மார்ட்' பார்க்கிங் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன,'' என, பெங்களூரு தெற்கு மாநகராட்சி கமிஷனர் ரமேஷ் கூறி உள்ளார்.
இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:
பெங்களூரின் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான ஜெயநகரில், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மார்ட் பார்க்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 'பார்க் லென்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மாநகராட்சி கூட்டு முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்த முறை அமலாகும் போது வாகனங்களை நிறுத்த இடத்தை கண்டறிவது எ ளிதாகும். குறுகிய இடத்தில் அதிக வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்கும். இதற்காக வரைபடம் உருவாக்கப்படும். இதற்காக ஏ.ஐ., கேமராக்கள் பொருத் தப்படும்.
வாகன உரிமையாளர்கள், அந்தந்த இடங்களில் உள்ள கியு.ஆர்., குறியீடுகளை, 'ஸ்கேன்' செய்து வாகன நிறுத்தத்திற்கான கட்டணத்தை செலுத்தலாம். வாகனத்தை நிறுத்தியது முதல், ஐந்து நிமிடங்களுக்குள் பணத்தை செலுத்துவது கட்டாயமாகும். ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். விதிகளை மீறுவோரின் வாகனங்களுக்கு பணியில் உள்ள ஊழியர்கள் பூட்டு போடுவர். அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் விடுவிக்கப்படும்.
இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
ஜெயநகர் போலீஸ் நிலையம், அதன் சுற்றுபகுதிகளில் வழக்குகளில் சிக்கி பல ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த, 117 இரு சக்கர வாகனங்கள், 7 கார்கள், 10 ஆட்டோக்கள் என மொத்தம் 134 வாகனங்கள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
