/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு மருத்துவமனைகளில் சூரிய மின்சாரம் உற்பத்தி
/
அரசு மருத்துவமனைகளில் சூரிய மின்சாரம் உற்பத்தி
ADDED : ஜன 20, 2026 06:24 AM

பெங்களூரு: அரசு மருத்துவமனைகளில், சோலார் பலகைகள் பொருத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் மின் கட்டண சுமை குறைவதுடன், நிரந்தர மின்சாரம் உற்பத்தியாகி நோயாளிகளின் சிகிச்சைக்கு வசதியாக இருக்கும்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், அரசு மருத்துவமனைகளின் மேற் கூரைகளில் சோலார் பலகைகள் பொருத்தும் திட்டம், 2024ல் துவக்கப்பட்டது. இது வரை மாநிலம் முழுவதும் 3,600 அரசு மருத்துவமனைகளின் மேற்கூரைகளில் சோலார் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
5,000 மருத்துவமனைகள் பேட்டரி அடிப்படையிலான வசதியால், தினமும் 24 மணி நேரமும் மருத்துவமனைகளுக்கு மின்சாரம் கிடைக்கிறது. அறுவை சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கும் போது, மின்சாரம் தடைபடுவதை தவிர்க்கலாம். செல்கோ பவுன்டேஷனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, நடப்பாண்டு இறுதிக்குள், 3,381 அரசு மருத்துவமனைகள், 1,500 ஆரம்ப சுகாதார மையங்கள் உட்பட 5,000 மருத்துவமனைகளில் சோலார் பலகைகள் பொருத்த, சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு 120 கோடி ரூபாய் செலவாகும்.
மாநிலத்தின் 119 தாலுகா மருத்துவமனைகளிலும் சோலார் பலகைகள் பொருத்தப்படும். சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க, சோலார் மின்சாரம் உதவியாக இருக்கும். அரசு மருத்துவமனைகளில் சோலார் பலகைகள் பொருத்துவதால், மின் கட்டண சுமை குறையும். அதிக விலை கொண்ட டீசல் ஜெனரேட்டர் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது.
சோலார் இ - மித்ரா அரசு மருத்துவமனைகளில் பொருத்தும், சோலார் மின் உற்பத்தி பலகைகள், 'ரிமோட் மானிட்டரிங் சிஸ்டம்' மூலமாக கண்காணிக்கப்படும். இதனால் இங்கு ஏதாவது பழுது ஏற்பட்டால், உடனடியாக சரி செய்ய உதவும். 'சோலார் இ - மித்ரா' மொபைல் செயலி வழியாகவும், சோலார் பலகைகளை கண்காணிக்கலாம். இதில் பழுது ஏற்பட்டால், மருத்துவமனை ஊழியர்கள் இந்த செயலி மூலமாக புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து, பிரச்னையை சரி செய்வர்.
சோலார் பலகைகளை நிர்வகிப்பது குறித்து, மருத்துவமனை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை, ராய்ச்சூரில் உள்ள சோலார் மின் உற்பத்தி மையம் ஏற்றுள்ளது.
ஆரம்ப சுகாதார மையங்களில் பொருத்தப்படும் சோலார் பலகைகள், நான்கு கே.வி., முதல் ஐந்து கே.வி., மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். தாலுகா மருத்துவமனைகளில் 10 கே.வி., திறன் கொண்ட சோலார் பலகைகள் பொருத்தப்படும். 5,000 மருத்துவமனைகளில் சோலார் பலகை பொருத்தினால், அடுத்த 10 ஆண்டுகளில், அரசு கருவூலத்துக்கு, 100 கோடி ரூபாய் அளவில் மிச்சமாகும். மருத்துவமனைகளுக்கு தடையில்லாமல், மின்சாரம் கிடைக்கவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

