UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 07:08 PM
சிக்கபல்லாபூர்: குடி போதையில் தாயை தவறாக பேசிய நபரை கொலை செய்த மகன் உட்பட, இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, சிக்கபல்லாபூர் எஸ்.பி., பத்மினி சாஹூ அளித்த பேட்டி:
சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகா, மார்கானுகுன்டே கிராமத்தின் புறநகரில், நவம்பர் 7ம் தேதி மதியம் 1:00 மணிக்கு ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருந்தனர். தகவலறிந்து அங்கு வந்த பாகேபள்ளி போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கினர்.
விசாரணையில், கொலையாகி கிடந்தவர் நாகராஜு, 45, என்பது தெரிந்தது.
தொடர்ந்து விசாரித்த போது, இவரை ஸ்ரீகாந்த் என்பவர் கொலை செய்ததை கண்டுபிடித்தனர். குடிபோதையில் இருந்த நாகராஜு, ஸ்ரீகாந்தின் தாயை பற்றி தவறாக பேசினார்.
இந்த கோபத்தில் நாகராஜுவை தாக்கி, தலையில் கல்லை போட்டு ஸ்ரீகாந்த் கொலை செய்தார்.
இந்த கொலைக்கு, அவரது நண்பரும், கூட்டாளியுமான சசிதர் உடந்தையாக இருந்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
