UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 11:36 PM
காடுகோடி: பெங்களூரு காடுகோடியின் பேவினமரதா காலனியில் வசித்தவர் பாக்யம்மா, 60. இவர், தன் மூன்றாவது மகன் பாலாஜி, 35, என்பவருடன் வசித்தார். செப்டம்பர் 25ம் தேதி இரவு, தன் தாய் பாக்யம்மா கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாக அக்கம், பக்கத்தினர், உறவினர்களிடம் பாலாஜி கூறினார்.
ஆனால் அப்பகுதியில் வசிக்கும் சிலருக்கு, இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக, போலீஸ் துறை அவசர எண் 112ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இறுதிச் சடங்குகள் முடியும் நேரத்தில், அங்கு வந்த போலீசார், பாக்யம்மாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறினர். போலீசார், உடலை எடுத்து சென்றனர். பரிசோதனை முடிந்த பின், உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைந்தனர்.
தற்போது வெளியாகி உள்ள அறிக்கையில், பாக்யம்மாவின் உடலில், 12 இடங்களில் பலத்த காயங்கள் இருப்பதால் கொலை என, உறுதிப்படுத்தப்படடுள்ளது. அதன் பின் போலீசார் விசாரணையை துவங்கினர். சம்பவம் நடந்த நாளன்று, தாயும், மகனும் சண்டையிட்டதாக கூறினர். அதன் பின் பாக்யம்மாவின் மகன் பாலாஜியை விசாரித்த போது, தாயை, தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் அவர், ‘என் தந்தை இறந்த பின், தாய் பாக்யம்மா குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். காலையிலேயே குடித்துவிட்டு, வீட்டில் தொல்லை கொடுத்தார்.
‘என் தாயின் 32 கிராம் எடையுள்ள தங்க நகைகளை, நான் அடமானம் வைத்துள்ளேன். அதை மீட்டு தரும்படி தகராறு செய்தார். இது போன்ற காரணங்களால், சண்டை நடந்த போது கோபத்தில் தாயை தாக்கியதில், அவர் உயிரிழந்தார். அதன்பின் என்ன செய்வது என தெரியாததால் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாக, பொய் சொன்னேன்’ என விவரித்தார். அதன்பின், பாலாஜியை நேற்று முன் தினம், போலீசார் கைது செய்தனர்.
