பெங்களூருக்கு விரைவில் 5 போலீஸ் கமிஷனர்கள் நியமனம்
பெங்களூருக்கு விரைவில் 5 போலீஸ் கமிஷனர்கள் நியமனம்
UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 11:06 PM
பெங்களூரு: பெங்களூரில் புதிதாக, 5 போலீஸ் கமிஷனர்கள் அலுவலகங்களை உருவாக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகாவின் தலைநகராக பெங்களூரு உள்ளது. இங்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் குவிந்துள்ளதாலும், ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் இருப்பதாலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், பெங்களூரில் வசிக்கின்றனர்.
இதனால், தலைநகரின் மக்கள் தொகை தற்போது 1.50 கோடியாக உள்ளது.மக்கள் தொகை அதிகரிக்க, நகரில் நிலவும் குற்றங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை, சைபர் மோசடி என ஒவ்வொரு நாளும் ஏராளமான குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவாகின்றன. சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, போக்குவரத்து பிரச்னைகளை நிர்வகிப்பது என போலீஸ் அதிகாரிகளுக்கு தினமும் தலைவலி அதிகரிக்கிறது.
தற்போது பெங்களூரு நகரம், ஒரே ஒரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கமிஷனருக்கு ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும், அதிகார பரவல் அளிக்கும் வகையிலும், புதிதாக, 5 போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பெங்களூரில் புதிதாக மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 5 கமிஷனர்கள் அலுவலகங்கள் உருவாக்கவும், முதற்கட்டமாக 1,022 பணியிடங்களை நிரப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஐந்து போலீஸ் கமிஷனர்களுக்கும் உயர் அதிகாரியாக தலைமை போலீஸ் கமிஷனர் பதவி உருவாக்கவும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. விரைவில், அவர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.
அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசு இந்த முடிவை எடுக்கவில்லை.
' 'முக்கிய பதவிகளை எதிர்பார்க்கும் மூத்த அதிகாரிகளுக்கு பதவி வழங்கவே இந்த முடிவு. மாநகராட்சியை 5 ஆக பிரித்ததன் மூலம் நிர்வாகம் முடங்கியுள்ளது. இப்போது காவல்துறையை பிரித்தால் பாதுகாப்பு அமைப்பில் தோல்வி ஏற்படும்.
''இது, துக்ளக்தனமான முடிவு. முக்கிய பிரமுகர்கள் வரும் போது அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும்,'' என்றார்.
