/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவக்கம்
/
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவக்கம்
ADDED : மார் 22, 2025 06:49 AM
பெங்களூரு; கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு, நேற்று துவங்கியது. கேமரா கண்காணிப்புடன் தேர்வு நடந்தது. தேர்வு மையங்களில் குடிநீர், ஓ.ஆர்.எஸ்., வசதி செய்யப்பட்டிருந்தது. முதலுதவி அளிக்கத் தேவையான வசதியும் செய்யப்பட்டிருந்தது.
முதல் நாளான நேற்று, முதல் மொழி தேர்வு காலை 10:00 முதல், மதியம் 1:15 மணி வரை நடந்தது. முதல் நாள் தேர்வுக்கு 98.6 சதவீதம் மாணவர்கள் ஆஜராகினர். தேர்வு மையங்களை சுற்றிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கதக் மாவட்டம், முன்டரகி தாலுகாவின், டம்பளா கிராமத்தின் ஜகத்குரு தோன்டதார்யா உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஜலஜாக்ஷி கிலாரி என்ற மாணவியின் பாட்டி, வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார்.
பாட்டியை இழந்த துயரத்தில் மாணவிக்கு, சக மாணவியர், ஆசிரியர்கள் தைரியம் கூறினர். அதன்பின் மாணவி ஜலஜாக்ஷி, தன் பாட்டியை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு, தேர்வு எழுதினார்.
தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி தாலுகாவின், ஜனதா உருது உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் நாஜியா பானு, தேர்வு எழுதும்போது திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
வலியால் துடிதுடித்த மாணவியை, ஆசிரியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின், சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின், மீண்டும் தேர்வுக்கு ஆஜரானார்.
விஜயபுரா தாலுகாவின், புரனாபுரா கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், ஆறு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்கவில்லை. எனவே அவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. அவர்கள் நியாயம் கேட்டு, மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், துாபகெரே அரசு பி.யு., கல்லுாரியில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகள் மற்றும் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
மர்ம கும்பல், நேற்று முன் தினம் நள்ளிரவு கல்லுாரி அறைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியது. 10 அறைகளில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றில் ஆறு கேமராக்கள் சேதமடைந்தன.
நேற்று காலை இதை கண்ட போலீசார், அதிகாரிகள் கேமராக்களை சரி செய்து, மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு அளித்தனர்.