UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 08:34 PM

ஹொஸ்கோட்: ஹொஸ்கோட் பகுதியில், பாதசாரிகளுக்கு இடையூறாக நடைபாதையில் இருந்த கடைகள் நேற்று அகற்றப்பட்டன.
பெங்களூரில் இருந்து கோலா ர் வழியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஹொஸ்கோட் முக்கிய நகரமாக இருக்கிறது. ஹொஸ்கோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படக்கூடிய இடமாக கே.இ.பி., சதுக்கம் உள்ளது.
இந்த சதுக்கத்தில் உள்ள நடைபாதை முழுதும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இது பாதசாரிகளுக்கு இடையூறாக இருந்தது. மேலும், சாலைகளை ஆக்கிரமித்தும் சில கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த கடைகளை அகற்றும்படி, கடை வியாபாரிகளுக்கு, வருவாய் துறை அதிகாரிகள், 2024ம் ஆண்டு நோட்டீஸ் வழங்கினர்.
இது பற்றி கடந்த சில நாட்களாக அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், கடைகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, வருவாய் துறை அதிகாரிகள், பொக்லைன் உதவியுடன் கடைகளை அகற்றும் பணிகள் துவங்கின. பாதுகாப்பு பணியில் ஹொஸ்கோட் போலீசார் ஈடுபட்டனர்.
நடைபாதைகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டன. அப்போது, கடை வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் உருவானது. பின், இதை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசுக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், அபராதம் விதிக்கப்படும். இப்பகுதியில் உள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால், கடைகள் அகற்றப்பட்டு உள்ளன' என்றனர்.
