/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பதவியை காப்பாற்றவே போராட்டம்; விஜயேந்திராவை சாடிய சித்தராமையா
/
பதவியை காப்பாற்றவே போராட்டம்; விஜயேந்திராவை சாடிய சித்தராமையா
பதவியை காப்பாற்றவே போராட்டம்; விஜயேந்திராவை சாடிய சித்தராமையா
பதவியை காப்பாற்றவே போராட்டம்; விஜயேந்திராவை சாடிய சித்தராமையா
ADDED : ஏப் 07, 2025 10:20 PM

பெங்களூரு; மாநிலத் தலைவர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக, அரசுக்கு எதிராக மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை, விஜயேந்திரா ஏற்பாடு செய்து இருப்பதாக, முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, 'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
காங்கிரஸ் அரசுக்கு எதிராக என்று கூறி மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அக்கட்சித் தலைவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மத்திய அரசால் கர்நாடகாவிற்கு இழைக்கப்படும் அநீதி குறித்து குரல் எழுப்ப முடியாமலும், மக்கள் நலனில் அக்கறையின்றி செயல்படும் எதிர்க்கட்சிகள் பற்றி, மக்கள் புரிந்து கொள்ள இந்த யாத்திரை உதவும் என்று மனதார நம்புகிறேன்.
இவ்வளவு திறமையற்ற, வெட்கமற்ற, மக்கள் விரோத எதிர்க்கட்சியை இதற்கு முன்பு மாநிலம் பார்த்தது இல்லை.
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மீது, அவரது கட்சியினரே குற்றச்சாட்டு சொல்கின்றனர்.
சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாத விஜயேந்திராவுக்கு, அரசை கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? எங்களை கேள்வி கேட்கும் முன்பு, இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.,வுக்கு எதிராக பேசி வரும் பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு பதிலடி கொடுக்கட்டும்.
மனநிலை
பா.ஜ.,வில் நடப்பதை வெளிப்படையாக கூறியதால், எத்னால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது அவர் மேலும் குற்றச்சாட்டு கூறுகிறார்.
தன் தலைவர் பதவியை காப்பாற்றிக் கொள்ள, அரசுக்கு எதிராக மக்கள் ஆக்ரோஷ யாத்திரைக்கு விஜயேந்திரா ஏற்பாடு செய்துள்ளார். அவர் மீது கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
வாக்குறுதித் திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 51,000 கோடி ரூபாய் பயனாளிகளை நேரடியாக சென்று அடைகிறது.
இதை பா.ஜ.,வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவது எங்களுக்கு ஆசிர்வாதம் தான்.
முதல் நாளில் இருந்தே வாக்குறுதித் திட்டங்களை எதிர்த்து வரும் பா.ஜ.,வின் மனநிலையை பெண்கள் நன்கு புரிந்து கொண்டு உள்ளனர்.
அக்கறை
நம் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதி, உரிமைகளை குறைத்துள்ளனர். நாம் செலுத்தும் 5 லட்சம் கோடி ரூபாய் வரி பணத்தில் 60,000 கோடி ரூபாய் மட்டுமே திரும்ப கிடைக்கிறது.
கர்நாடக மக்கள் நலனில் அக்கறை இருந்தால், பிரதமர் வீட்டின் முன் பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்தட்டும். கர்நாடகாவை எதிரி மாநிலமாக பிரதமர் மோடி பார்க்கிறார்.
கர்நாடகாவின் குரலை நசுக்கும் வகையில் இங்கு உள்ள லோக்சபா தொகுதிகளை குறைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கு எதிராக குரல் கொடுக்காமல் பா.ஜ., - எம்.பி.,க்கள் அடிமைகள் போன்று உள்ளனர்.
தனிப்பட்ட முறையில் மாநிலத்தில் திறமையான எதிர்க்கட்சி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நிர்வாகத்தில் தெரிந்தோ, தெரியாமலோ நடக்கும் தவறுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகள் பொறுப்பு.
ஆனால் உட்கட்சி பிரச்னையால் பா.ஜ., கட்சி கேலி பொருளாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.