ADDED : செப் 25, 2026 03:52 AM
- நமது நிருபர் -: புதுச்சேரியில் நடந்த, 37வது தென்னக மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஹேமர் த்ரோ என அழைக்கப்படும் சுத்தி எறிதல் விளையாட்டு போட்டியில், சிக்கமகளூரை சேர்ந்த சாலிம், தங்கம் வென்று, புதிய சாதனை செய்து, கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
புதுச்சேரியில் செப்டம்பர் 16 முதல், 18ம் தேதி வரை, 37வது தென்னக மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான, ஹேமர் த்ரோ போட்டியில், கர்நாடகா சார்பில், விளையாட்டு வீரர் சாலிம் பங்கேற்று, தங்கம் வென்றுள்ளார்.
சிக்கமகளூரு மாவட்டம், பாளே ஹொன்னுாரில் உள்ள எஸ்.ஜே.ஆர்., கல்லுாரியில் படிக்கும் இவர், விளையாட்டில் பல பதக்கங்கள் வென்றுள்ளார். தற்போது புதுச்சேரியில் நடந்த தடகள போட்டியில் பங்கேற்று, சுத்தியலை, 64.09 மீட்டர் துாரத்துக்கு எறிந்து, முதலிடத்தை பிடித்தார்.
இளம் வயதில், தன் அரிய சாதனை மூலம், கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தென்னக மண்டல தடகள போட்டிகளில், இதற்கு முன், 2003ல், 62.44 மீட்டர் துாரத்துக்கு, ஹேமர் வீசியது சாதனையாக இருந்தது. 23 ஆண்டுகளுக்கு பின், இந்த சாதனையை சாலிம் முறியடித்துள்ளார்.
இந்த சாதனை செய்த இவருக்கு, பாராட்டு குவிந்துள்ளது. சாலிமின் சாதனைக்கு அவரது பயிற்சியாளர்கள் அம்ருதேஷ், அரவிந்த் உறுதுணையாக இருந்தனர்.
