ADDED : செப் 20, 2026 11:16 PM

- நமது நிருபர் -:
உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் வீணா ஐதல், 47. தனியார் வங்கி ஊழியர். தற்போது, மங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தனது சிறுவயதில் கோலம் எதுவும் போட்டதில்லை; கோலம் போடவும் பிடிக்கவில்லை. இருப்பினும், 2018ம் ஆண்டு தனது வீட்டில் முதல் முறையாக ரங்கோலி கோலம் போட்டார். அதை பார்த்த பலரும் பாராட்டினர்.
இது, அவருக்கு புத்துணர்ச்சியை தந்தது. இதையடுத்து தொடர்ந்து ரங்கோலி வரைவதில் நேரத்தை செலவிட துவங்கினார். தனது வீட்டின் தரையில் திரைப்பட நடிகர்களின் படங்களை பெரிய அளவில் வரைந்து, அதற்கு வண்ணம் பூசினார். பின், அரசியல்வாதிகள், நாட்டின் தலைவர்களை வரைந்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார்.
இதை அவர் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே செய்தார். அப்போது, தான் வீட்டில் அமைதியான சூழல் நிலவுவதே காரணம் என்கிறார்.
இவர் ரங்கோலி கோலம் வரைவதற்கு, 4 முதல் 35 மணி நேரம் வரை எடுத்து கொள்கிறார். 2 முதல் 11 அடி உயர ரங்கோலி வரைகிறார். இதை பலரும் பாராட்டியதை தொடர்ந்து, அவர் கோவில் திருவிழா, நெருங்கிய நண்பர்களின் இல்ல விழாக்களில் ரங்கோலி வரைய துவங்கினார். இதுவரை 400க்கும் மேற்பட்ட ரங்கோலிகளை வரைந்தார். இவரது படைப்புகளை பார்த்து கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி பாராட்டியுள்ளார். இவர் சமீபத்தில் பிரதமர் மோடியின் படத்தை வரைந்து, அனைவரது கவனத்தையும் பெற்றார்.
மேலும், மங்களூரில் சமீபத்தில் நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, முதல்வர் சிவகுமாரின் படத்தை வைத்து ரங்கோலி வரைந்தார். இது, இவருக்கு மேலும் புகழை தேடி தந்தது.
இது குறித்து, அவர் கூறுகையில், “இந்த கலையை யார் வேண்டுமானாலும் கற்கலாம். பொறுமை, ஆர்வம், கடவுள் பக்தி, ஒருமுகத்தன்மை மட்டும் இருந்தால் போதும். உங்கள் முதல் தோல்வியை, வெற்றிக்கான படிக்கல்லாக மாற்றி, மீண்டும் மீண்டும் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்,” என்கிறார்.
