/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திடீர் திருப்பம்!: சித்து ஆதரவாளரான அமைச்சர் ஜமீர் து.முதல்வருக்கு ஆதரவு: முதல்வர் பதவிக்காக மீண்டும் துவங்கியது விளையாட்டு
/
திடீர் திருப்பம்!: சித்து ஆதரவாளரான அமைச்சர் ஜமீர் து.முதல்வருக்கு ஆதரவு: முதல்வர் பதவிக்காக மீண்டும் துவங்கியது விளையாட்டு
திடீர் திருப்பம்!: சித்து ஆதரவாளரான அமைச்சர் ஜமீர் து.முதல்வருக்கு ஆதரவு: முதல்வர் பதவிக்காக மீண்டும் துவங்கியது விளையாட்டு
திடீர் திருப்பம்!: சித்து ஆதரவாளரான அமைச்சர் ஜமீர் து.முதல்வருக்கு ஆதரவு: முதல்வர் பதவிக்காக மீண்டும் துவங்கியது விளையாட்டு
ADDED : அக் 05, 2025 03:59 AM

மாண்டியா: ''துணை முதல்வர் சிவகுமார் முதல்வராக வேண்டுமென நானும் விரும்புகிறேன்,'' என, முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான அமைச்சர் ஜமீர் அகமதுகான் திடீரென கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 'சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளும், முதல்வராக தொடர்வார்' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா கூறி இருக்கின்றனர். மேலிடத்தின் தடையை மீறி, ஆளாளுக்கு கருத்துத் தெரிவித்து, முதல்வர் பதவிக்கான விளையாட்டை விளையாடி வருகின்றனர். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் சிவகுமாருக்கு, முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது.
பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையே 2023ல் போட்டி எழுந்தது. கட்சி மேலிடம் தலையிட்டு, சிவகுமாரை துணை முதல்வர் ஆக்கியது. ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று ஒப்பந்தம் போட்டதாக அந்நேரத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.
இரண்டரை ஆண்டுகள் என்ற ஒப்பந்தம் உண்மை என்றால், முதல்வர் சித்தராமையா அடுத்த மாதம், பதவியில் இருந்து விலக வேண்டும்.
ஆனால் அவரோ, 'நானே ஐந்து ஆண்டுகளும், முதல்வராக இருப்பேன்' என, அடிக்கடி கூறுகிறார். இது சிவகுமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
'முதல்வர் மாற்றம் பற்றி, கட்சி மேலிடம் முன் எந்த விவாதமும் இல்லை' என, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று முன்தினம் கூறி இருந்தார். அத்துடன் பதவி மாற்றம் குறித்து யாரும் கருத்துத் தெரிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் சிவகுமாரும் கூறினார்.
தவறு இல்லை இந்நிலையில், மாண்டியாவில் நேற்று, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் அளித்த பேட்டி:
நவம்பர், டிசம்பர் புரட்சி என, ஒரு புரட்சியும் நடக்காது. சித்தராமையா தற்போது முதல்வராக உள்ளார். அவரே ஐந்து ஆண்டுகளும் பதவியில் நீடிப்பார். இதுபற்றி அவரே கூறி இருக்கிறார். அவரது கருத்தை, துணை முதல்வர் சிவகுமாரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
சிவகுமார் முதல்வராக வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் விரும்புகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை. அவர் முதல்வராக வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். ஆனால் முடிவு எடுப்பது எல்லாம் கட்சி மேலிடம்.
அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். தனிநபரை விட கட்சி முக்கியமானது. முதல்வர் மாற்றம் குறித்து பேச கூடாது என்று கூறினாலும், எம்.எல்.ஏ.,க்கள் பசவராஜ் சிவகங்கா, இக்பால் உசேன், ரங்கநாத் பேசி உள்ளனர்.
அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆசை இயல்பு அடுத்த மாதம் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு எதிர்பார்ப்பு உள்ளது. எங்களிடம் 140 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அமைச்சர் ஆக வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. யாரையும் தவறு சொல்ல முடியாது.
பா.ஜ., ஆட்சியில் ராஜிவ் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கு கூட, வீடு கொடுக்கவில்லை. அவர்கள் காலத்தில் கொடுத்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டால், அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறேன்.
ஏழு ஆண்டுகள் முதல்வராக இருக்கும் சித்தராமையா, தன் ஆட்சிக் காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். பா.ஜ., ஆட்சியில் மேம்பாட்டுப் பணிகள் நடந்தது இல்லை. அரசியலுக்காக ஏதேதோ பேசி மக்களை திசை திருப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரபரப்பு ஜமீர் அகமது கான், சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவரே, சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறி இருப்பது, சித்தராமையா ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜமீர் அகமது கான், பெங்களூரு சாம்ராஜ்பேட் எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
பெங்களூரு நகர மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் சிவகுமார் இருப்பதால், அவருக்கு 'ஐஸ்' வைக்க, முதல்வர் பதவி குறித்து கருத்து தெரிவித்திருக்கலாம் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளும் பதவியில் தொடர்வார் என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, முதல்வர் பதவி குறித்து யாரும் பேசாத நிலையில், மேலிடத்தின் எச்சரிக்கையையும் மீறி தற்போது அந்த பதவிக்கான விளையாட்டு மீண்டும் சூடுபிடித்திருப்பது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.