கரும்பு விவசாயிகள் கோரிக்கை நியாயமானது ‘மாஜி’ அமைச்சர் முருகேஷ் நிரானி ஆதரவு
கரும்பு விவசாயிகள் கோரிக்கை நியாயமானது ‘மாஜி’ அமைச்சர் முருகேஷ் நிரானி ஆதரவு
UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 07:54 PM

ஹூப்பள்ளி: ‘‘கரும்பு விலையை அதிகரிக்க வலியுறுத்தி, விவசாயிகள் நடத்தும் போராட்டம் நியாயமானது. இவர்களின் கோரிக்கை நிறைவேற வேண்டும்,’’ என பா.ஜ., முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கரும்பு விலையை அதிகரிக்க வேண்டும் என, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது தான். உரம், தொழிலாளர்களின் கூலி உட்பட மற்ற செலவுகள் அதிகரித்துள்ளதால் கரும்பு விலையை அதிகரிக்க வேண்டும்.
விவசாயிகள், பொதுமக்கள், சர்க்கரை ஆலைகள், கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் அரசின் நலனை மனதில் கொண்டு, விலை நிர்ணயிக்க வேண்டும். இதற்காக விஞ்ஞானி ரமேஷ் சந்திரா தலைமையில், வல்லுநர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள், தொழிலாளர்கள், அரசு, வங்கிகளின கருத்துகளை சேகரித்து, 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு முடிவு செய்யும்.
நாட்டில் கரும்பு உற்பத்தியில். உத்தரபிரதேசம் முதலாவது, மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்தில், கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளன. நாட்டில் 800 சர்க்கரை ஆலைகள் உள்ளன. கர்நாடகாவில் 74 முதல் 75 ஆலைகள் செயல்படுகின்றன. கரும்பு விலை பிரச்னை நாடு முழுவதுமானது.
தற்போது சர்க்கரை விலை குறைவாக இருப்பதால், விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது இல்லை. வீட்டு பயன்பாடு சர்க்கரை, குளிர்பானம், சாக்லேட், ஐஸ்கிரீம் இனிப்பு பண்டங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் சர்க்கரைக்கு தனித்தனி விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது, என் தனிப்பட்ட கருத்து.
இதனால் பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்தாமல், வர்த்தக பயன்பாட்டால் தொழிற்சாலைகளின் வருவாயை அதிகரிக்கலாம். இதன் பயன் விவசாயிகளுக்கு கிடைக்கும்.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மட்டுமே, கரும்பு விலையை தீர்மானிக்க முடியாது. விவசாயம், பெட்ரோலியம், மின்சாரம் உட்பட சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், அமைச்சர்கள் கமிட்டியில் ஆலோசித்து, முடிவு செய்ய வேண்டும். கரும்புக்கு எவ்வளவு விலை உயர்த்த வேண்டும் என்பதை கமிட்டியே முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
