ADDED : ஆக 04, 2026 02:10 AM

மைசூரு: காங்கிரஸ் மூத்த தலைவர் தன்வீர் செய்ட்டுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் விரக்தி அடைந்த அவரது ஆதரவாளர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆறு முறை எம்.எல்.ஏ., பதவி வகித்தவரும், மைசூரு நரசிம்மராஜ தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தன்வீர் செய்ட்டுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இதனால், மைசூரு உதயகிரியில் உள்ள தன்வீரின் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர். காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது, ஆதரவாளர்களில் ஒருவரான தர்பேஸ், 31, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் தன்வீர் செய்ட் பார்த்து நலம் விசாரித்தார். தர்பேஸின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மணிப்பால் மருத்துவமனை அருகே தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
தன்வீர் செய்ட் கூறுகையில், ''எதன் அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என தெரியவில்லை. கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. கட்சிக்கு விசுவாசமாக செயல்பட்ட எனக்கு பதவி வழங்கவில்லை. எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை. மைசூரு மாவட்டத்துக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மீண்டும் மறுக்கப்படுகிறது,'' என்றார்.
