கடும் கோபம்! தலைமை தேர்தல் கமிஷன் மீது சுப்ரீம் கோர்ட்... சிருங்கேரி தேர்தல் விவகாரத்தில் அதிருப்தி
கடும் கோபம்! தலைமை தேர்தல் கமிஷன் மீது சுப்ரீம் கோர்ட்... சிருங்கேரி தேர்தல் விவகாரத்தில் அதிருப்தி
UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 10:34 PM
கர்நாடக சட்டசபைக்கு, கடந்த 2023ல் நடந்த தேர்தலில், சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தொகுதியில் காங்கிரசின் ராஜேகவுடா வெறும் 201 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பதிவான 1,811 தபால் ஓட்டுகளில் 279 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதால், தனது வெற்றி பறிபோனதாக பா.ஜ., வேட்பாளர் ஜீவராஜ் குற்றச்சாட்டு கூறினார்.
தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணி, தேர்தல் முடிவுகளை அறிவிக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி நடராஜ், மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆண்டின் மே மாதம் 3ம் தேதி மறு ஓட்டு எண்ணிக்கையை, கர்நாடக தேர்தல் அதிகாரி அலுவலகம் நடத்தியது. அதன் முடிவுகளை ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில், உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ராஜகவுடாவுக்கு 255 ஓட்டுகள் குறைந்துள்ளது என்று கூறியதுடன், ஜீவராஜ் வெற்றியாளர் என்று நீதிமன்றம் அறிவித்தது.
மேல்முறையீடு மனு
இதை எதிர்த்து ராஜேகவுடா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் ராஜேகவுடா எம்.எல்.ஏ.,வாக தொடருகிறார்.
இந்நிலையில் 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது ஓட்டு எண்ணிக்கை, மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பான வீடியோ ஆதாரங்களை கொடுக்க, தலைமை தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடும்படி, ராஜேகவுடா மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர், வீடியோ காணொளி ஆதாரங்களை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். ஆனால் வீடியோ ஆதாரங்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை.
நேற்று நடந்த விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் சேஷாத்ரி நாயுடு வாதிடுகையில், ‘‘2023 சட்டசபை தேர்தலின் சிருங்கேரி தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் அசல் வீடியோ காணொளியை கண்டுபிடிக்க முடியவில்லை,’’ என்றார்.
இந்த பதிலை கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
பாதகமான முடிவு
நீதிபதிகள் கூறியதாவது:
நாடு முழுதும் தேர்தல் நடத்தும் பொறுப்பு, தலைமை தேர்தல் ஆணையத்தின் வசம் உள்ளது. தேர்தல் முடிவுகளின் வீடியோ காணொளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது சரியா... தேர்தல் நடத்துவது தான் உங்கள் வேலை. அதற்கு தேவையான ஆவணங்களை கூட பாதுகாப்பாக வைக்க முடியாதா?
உங்களிடம் தற்போது என்ன ஆதாரங்கள் உள்ளதோ, அதை அடுத்த விசாரணையின் போது இங்கு சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாங்கள் பாதகமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும். நீங்கள் கூறும் வலுவற்ற, சாக்குபோக்குகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
பின், மனு மீதான அடுத்த விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
