இன்று முழு அடைப்புக்கு அழைப்பு தமிழக பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கம்
இன்று முழு அடைப்புக்கு அழைப்பு தமிழக பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கம்
ADDED : ஆக 13, 2026 12:14 AM
பெங்களூரு: கர்நாடகாவில் முழு அடைப்புக்கு ஆதரவு தராத கன்னட அமைப்புகள் மீது, வாட்டாள் நாகராஜ் கோபம் அடைந்துள்ளார். தமிழக பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து, இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்த, கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு பல கன்னட அமைப்புகள், தனியார் பள்ளி கூட்டமைப்புகள் முதலில் ஆதரவு தெரிவித்தன. பின், தங்கள் முடிவை மாற்றி கொண்டனர். இருந்தாலும் முழு அடைப்பு நடந்தே தீரும் என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.
இந்நிலையில், முழு அடைப்புக்கு ஆதரவு தருவது இல்லை என்று கன்னட அமைப்புகள் நேற்று மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தினர். இதனால் அத்தியாவசிய மற்றும் முக்கிய சேவைகள் வழக்கம் போல செயல்படும். பஸ், மெட்ரோ சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது.
வாட்டாள் நாகராஜின் ஆதரவாளர்கள் பெங்களூரு உட்பட சில பகுதிகளில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு போலீசார் வெளியிட்ட அறிக்கையில், 'முழு அடைப்புக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று பல கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. ஆனாலும் போராட்டம் நடத்துவோரை தடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் பொது மக்களுக்கு இடைஞ்சலாக யார் போராட்டம் நடத்தினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளனர்.
இன்று காலை பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு புறப்படும் பஸ்கள், போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் என்றும், தமிழகத்தில் இருந்து பெங்களூரு வரும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்படும். நிலைமையை பார்த்து பெங்களூருக்குள் வரும் என்று, தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் முழு அடைப்புக்கு ஆதரவு தராதவர்கள் மீது வாட்டாள் நாகராஜ் கோபம் அடைந்துள்ளார்.
அவர் கூறுகையில், ''மு தலில் முழு அடைப்புக்கு ஆதரவு தருவதாக கூறிவிட்டு, கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டனர். ஒன்பது மாத கர்ப்பிணிக்கு கடைசி நேரத்தில் பிரசவம் பார்க்க வேண்டாம் என்று கூறுவது போல உள்ளது. என்னை ஏமாற்றியவர்களுடன் இனி ஒரு போதும் உறவு இல்லை,'' என்றார்.
