/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்; மேற்பார்வையாளராக தமிழ் அதிகாரி நியமனம்
/
கர்நாடகாவில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்; மேற்பார்வையாளராக தமிழ் அதிகாரி நியமனம்
கர்நாடகாவில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்; மேற்பார்வையாளராக தமிழ் அதிகாரி நியமனம்
கர்நாடகாவில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்; மேற்பார்வையாளராக தமிழ் அதிகாரி நியமனம்
ADDED : ஜன 08, 2026 05:53 AM

பெங்களூரு: கர்நாடகாவில் புலிகள் கணக்கெடுப்பு துவங்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதற்காக புலிகள் திட்ட முதன்மை வன அதிகாரி ரமேஷ் குமார், மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, வனத்துறை வெளியிட்ட அறிக்கை:
நாட்டில் புலிகளின் சூழ்நிலை குறித்து தெரிந்து கொள்ள, அனைத்து மாநிலங்களிலும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இதன்படி 2010, 2014, 2018, 2022ல் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கர்நாடகாவில் 2010ல், 300 புலிகள், 2014ல் 406 புலிகள், 2018ல், 524 புலிகள் இருந்தன.
கடந்த 2014ன் கணக்கெடுப்பின்படி, புலிகள் எண்ணிக்கையில், நாட்டிலேயே கர்நாடகா முதல் இடத்தில் இருந்தது.
இப்போது மத்திய பிரதேசத்துக்கு பின், இந்தியாவில் மிக அதிகமான புலிகள் உள்ள இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பின், இம்மாதம் 5ம் தேதி, புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது. புலிகள் திட்ட முதன்மை வன அதிகாரி ரமேஷ் குமார், புலிகள் கணக்கெடுப்பு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கணக்கெடுப்பு அறிக்கை 2027ல் வெளியிடப்படும். இதில் பங்கேற்கும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு, 2025 ஆகஸ்ட் 22ல் டேராடூனில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களில், கர்நாடகாவின் அனைத்து புலிகள் சரணாலயங்களில், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 'டைகர் செல்' என அழைக்கப்படும் கர்நாடக வன விலங்குகள் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பில், பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்மாதம் 5ம் தேதி, அதிகாரப்பூர்வமாக புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது. வனப்பகுதியில் கால் நடையாக குறைந்தபட்சம் ஐந்து கி.மீ., தொலைவு ஆய்வு நடக்கும். மூன்று கட்டங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ஜனவரி 27 முதல், 30 வரை 10 வனப்பகுதிகள், பிப்ரவரி 2 முதல், 5 வரை ஏழு வனப்பிரிவுகளில் கணக்கெடுப்பு நடத்தப்படும். இப்பணிக்காக 9,276 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல் 2 கட்டங்களில், வனத்துறை ஊழியர்கள் அந்தந்த வனப்பகுதிக்கு சென்று, கணக்கெடுப்பு நடத்துவர். மூன்றாம் கட்டத்தில் கேமரா டிராப்களை பயன்படுத்தி, கணக்கெடுப்பு நடத்தப்படும். அசைவ விலங்குகளின் கால் தடங்களை வைத்து, அவைகள் நடமாடும் பாதைகளை அடையாளம் கண்டு, பாதையின் இரண்டு ஓரங்களிலும், தலா ஒன்று வீதம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும்.
கர்நாடகாவின் ஐந்து புலிகள் சரணாலய பகுதிகளில், 2,230 கேமரா டிராப்கள் உள்ளன. இவைகள் கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்படும். பண்டிப்பூர், நாகரஹொளே உட்பட, பல்வேறு புலிகள் சரணாலயங்களில் கணக்கெடுப்பு நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

