ADDED : செப் 05, 2026 03:29 AM

தாகூர் மெமோரியல் பள்ளியில், 2003ல் சமூக அறிவியல் ஆசிரியராக சேர்ந்தேன். கடின உழைப்பால் 2020ல் தலைமை ஆசிரியரானேன். தமிழகத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளே படிக்கின்றனர். பலரும் ஏழ்மையான பின்புலத்தை கொண்டவர்கள்.
இவர்கள், தங்கள் வீடுகளுக்கு சென்றால், அவர்களுக்கு பாடம் கற்றுத்தர யாருமில்லை. இதை கவனித்த நான், பள்ளி முடிந்த பின் அவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பேன். அப்போது, அடிப்படை விஷயங்களை சற்று விரிவாக கூறுவேன்.
'ஒவ்வொரு மாணவரின் வீட்டுப்பாடத்திலும், அவர்களின் தாயின் கையெழுத்து இருக்க வேண்டும்' என உத்தரவிட்டேன். இதன் மூலம், மாணவர்கள் வீட்டில் படிப்பதை உறுதி செய்து கொள்வேன். மாணவர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியரின் மனநிலை, மாணவரின் மனநிலையை போல இருக்க வேண்டும். இதை தான், நான் கடைப்பிடிக்கிறேன்.
மறக்க முடியாத சம்பவம் என்றால், தமிழ் வழியில் பயின்ற 10ம் வகுப்பு மாணவி ஜான்சி, பொதுத்தேர்வில் 625க்கு 619 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
அப்போது, எனக்கு கிடைத்த சந்தோஷத்தை வார்த்தைகளால் அளவிட முடியாது. ஏழ்மையால் அவதிப்படும் மாணவர்களுக்கு பணம் ஏற்பாடு செய்வேன். உயர்கல்வி படிப்பது தொடர்பான மாணவர்களின் குழப்பங்களை தீர்ப்பேன்.
கென்னடி, 56, தலைமை ஆசிரியர்,
தாகூர் மெமோரியல் உயர்நிலை பள்ளி, யஷ்வந்த்பூர்
