/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மார்ச் 3ல் சட்டசபை கூட்டம் துவக்கம்
/
மார்ச் 3ல் சட்டசபை கூட்டம் துவக்கம்
ADDED : பிப் 21, 2025 05:27 AM

பெங்களூரு: கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் 3 ம் தேதி துவங்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
கர்நாடக சட்டசபையின் இரு அவைகளிலும் மார்ச் 3ம் தேதி முதல் கூட்டத்தொடர் நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஹாசன் மாவட்டம், அரிசிகெரே தாலுகா பானவாரா கிராம பஞ்சாயத்தை நகராட்சியாக தரம் உயர்த்த ஒப்புதல் கிடைத்து உள்ளது. பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் உள்ள மொரார்ஜி தேசாய் குடியிருப்பு பள்ளியின் பழைய கட்டடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக குடியிருப்பு கல்வி நிறுவன சங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட 61 குடியிருப்பு பள்ளிகளுக்கு 1,292 கோடி ரூபாய் ஒதுக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
பெலகாவி அதானியில் 50 படுக்கைகள் கொண்ட தாய் - சேய் மருத்துவமனை 37.98 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் சாகாபுரா ரூரல் பஸ் நிலையம் முன்பு அம்பேத்கர் சிலை கட்டுமான பணிக்காக 198 சதுர மீட்டர் நிலத்தை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
துவக்க நிறுவனங்களுக்கு கிளஸ்டர் விதை வழங்க 75 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். லோக் ஆயுக்தாவின் ஆண்டு அறிக்கையை சட்டசபை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க, கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் கேட்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதிக உபரிகள் காரணமாக, பல அரசு துறையின் குடிமராமத்து பணிகளுக்கான பல மதிப்பீடுகள் திருத்தப்பட்டு வருகின்றன. ஓய்வு பெற்ற அரசின் தலைமை இன்ஜினியர் குருபிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட பணி தயாரிப்பு ஆய்வு குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.
துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் பொது பணி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்கள், செயலர்கள் குழுவின் அறிக்கையை பற்றி விவாதித்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தெரிவிப்பர். ஹாவேரி ஷிகாவி குட்டசன்னபுரா கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் அரசு நிலத்தை, ஹொரபிரலிங்கேஸ்வரா சேவா சமிதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நில பதிவேடுகள் துறையில், நில அளவீட்டு பணிகளுக்காக 175 கோடி ரூபாய் செலவில் 5,000 ரோவர் இயந்திரங்கள் வாங்க ஒப்புதல் கிடைத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.