/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் பதவி கோஷம் பேச்சை நிறுத்திய முதல்வர்
/
அமைச்சர் பதவி கோஷம் பேச்சை நிறுத்திய முதல்வர்
ADDED : ஜூலை 27, 2025 05:07 AM
ஹாசன்: அரசிகெரேயில் நடந்த அரசு விழாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கேகவுடாவுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி இடையூறு செய்ததால், தன் உரையை முதல்வர் சித்தராமையா பாதியில் நிறுத்தினார். இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகா விளையாட்டு அரங்கில், பயனாளிகள் மாநாடு நேற்று நடந்தது. இதில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான, 23 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், ''மக்களுக்கு உதவி செய்யவே, எங்கள் கட்சி உள்ளது. தொகுதி எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடாவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்,'' என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய துணை முதல்வர் சிவகுமார், ''எம்.எல்.ஏ., சிவலிங்கேகவுடா சிறப்பாக பணியாற்றியுள்ளார். இத்தகைய எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால், கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறலாம்,'' என்றார்.
அப்போது, 'சிவலிங்கேகவுடாவை அமைச்சராக்குங்கள்' என, அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அவர்களை சமாதானம் செய்த சிவகுமார், ''அமைச்சராக்குவோம் விடுங்கள்; அமைச்சர் பதவி, கடையில் கிடைக்காது. உங்களுக்கு பதவி கிடைக்கும், பொறுமையாக இருங்கள்,'' என நம்பிக்கை அளித்தார்.
அதன்பின் உரையாற்ற துவங்கிய முதல்வர் சித்தராமையா, ''எம்.எல்.ஏ., சிவலிங்கேகவுடாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது,'' என்றார். அப்போதும் அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். எரிச்சல் அடைந்த முதல்வர், ''பேசாமல் அமருங்கள்,'' என, அறிவுறுத்தினார். அப்போதும் கோஷம் போட்டதால், உரையாற்றுவதை பாதியில் நிறுத்திவிட்டு, இருக்கைக்கு திரும்பினார்.
அங்கிருந்த அமைச்சர் ராஜண்ணாவும், எம்.எல்.ஏ., சிவலிங்கேகவுடாவும் முதல்வரை சமாதானம் செய்த பின், தன் உரையை முதல்வர் தொடர்ந்தார்.