/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிதிலமடைந்து வரும் வாணி விலாஸ் பாலம்
/
சிதிலமடைந்து வரும் வாணி விலாஸ் பாலம்
ADDED : ஜூன் 21, 2025 11:09 PM

ஹாசன்: நுாற்றாண்டு வரலாறு கொண்ட வாணி விலாஸ் பாலம் சரியான பராமரிப்பு இன்றி, சிதிலமடைந்துள்ளது. இதை சரி செய்ய அரசும் அதிகாரிகளும் ஆர்வம் காட்டவில்லை.
ஹாசன் மாவட்டம், ஹொளே நரசிபுரா தாலுகாவில், 1898ம் ஆண்டில் ஹேமாவதி ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டப்பட்டது. ஹொளே நரசிபுராவில் இருந்து, ஹாசனுக்கு செல்லும் பாதையில் பாலம் அமைந்துள்ளது.
அன்றைய மஹாராஜா கிருஷ்ண ராஜ உடையார் காலத்தில், பாலம் கட்டப்பட்டது. 1897ல் பணிகள் துவங்கி 1898ல் முடிந்தது. அதன்பின் பொதுமக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
பாலத்துக்கு 'வாணி விலாஸ்' என பெயர் சூட்டப்பட்டது. அன்று முதல், இன்று வரை பாலத்தில் கோடிக்கணக்கான வாகனங்கள், அதிக பாரம் சுமக்கும் 20 டயர்கள் கொண்ட லாரிகள் சென்று வந்துள்ளன.
மறைந்த முன்னாள் அமைச்சர் புட்டசாமி, நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது, வாணி விலாஸ் பாலம் பக்கத்திலேயே மற்றொரு பாலம் கட்டினார். புதிய பாலம் கட்டப்பட்டதால், பழைய பாலத்தை பயன்படுத்துவது குறைந்தது.
அதி நவீன தொழில்நுட்பம் இல்லாத காலத்தில், கட்டப்பட்ட பாலம் உறுதியாக இருந்தது. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமல், சீர்குலைந்துள்ளது. இரண்டு ஓரங்களிலும் தேவையற்ற செடிகள் வளர்ந்துள்ளன.
பாலம் பலவீனமானதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். செடிகளை அகற்றி பாலத்தை பாதுகாக்காவிட்டால், வரும் நாட்களில் இடிந்து விழுந்தாலும் ஆச்சர்யப்பட முடியாது என, எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை பொறியாளர் வினோதன் கூறியதாவது:
இதற்கு முன்பு வாணி விலாஸ் பாலம், பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டது. தற்போது இந்த பாலம், தேசிய நெடுஞ்சாலை - 370ல் சேர்ந்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் நிர்வகிக்க வேண்டும்.
பாலம் சீர்குலைந்து வருவது பற்றி, ஆணைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால் அங்கிருந்து எங்களுக்கு பதில் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.