ADDED : ஜூலை 09, 2025 06:43 AM

பெங்களூரு : 'சூரியன், சந்திரன் இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு திவாலானது உண்மை' என, பா.ஜ., கிண்டல் செய்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., 'எக்ஸ்' வலைதள பதிவு:
திறந்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகியும், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ வழங்க, நன்கொடையாளர்களை அரசு தேடி வருகிறது. இதுவே அரசு திவாலாகிவிட்டது என்பதை காட்ட போதுமான சாட்சி. சூரியன், சந்திரன் இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதை அளவு காங்கிரஸ் அரசு திவாலானது உண்மை. அரசின் நிதி நிலை குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்.
அதிர்ஷ்டத்தால் முதல்வர் ஆன சித்தராமையா, உருது பள்ளிகளுக்கு கூடுதல் நிதி வழங்குகிறார். ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ வாங்க பணம் ஒதுக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு ஷூ வாங்க ஒதுக்கிய 118 கோடி ரூபாய் எதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதை முதல்வரே சொல்ல வேண்டும். அவர் தன் ஆணவத்தை நிறுத்திவிட்டு, அரசின் கருவூலத்தில் பணம் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளட்டும்.
இவ்வாறு பதிவிடப்பட்டு உள்ளது.
'ஷூ' வாங்கி கொடுக்க நன்கொடையாளர்களை தேடுகிறோம் என்று எழுதிய பாத்திரத்தை கையில் பிடித்தபடி சிவகுமார், சித்தராமையா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆகியோர் அமர்ந்திருக்கும் படத்தையும் பா.ஜ., வெளியிட்டுள்ளது.