/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மயில் இறகில் மாலை 'மாஜி'க்கு வந்தது வினை
/
மயில் இறகில் மாலை 'மாஜி'க்கு வந்தது வினை
ADDED : ஜூலை 16, 2025 11:09 PM

ராய்ச்சூர்: பிறந்த நாளையொட்டி தன் ஆதரவாளர்கள் அணிவித்த மயில் இறகு மாலையால் பா.ஜ., முன்னாள் அமைச்சர் சிவானந்த நாயக்கிற்கு சிக்கல் எழுந்துள்ளது.
ராய்ச்சூரில் பா.ஜ., முன்னாள் அமைச்சர் சிவானந்த நாயக், கடந்த 14ம் தேதி தன் பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆளுயர மயில் இறகு மாலையை அணிவித்தனர்.
மயில் இறகு மாலை அணிந்தது தொடர்பாக, மாநில முதன்மை தலைமை வன அதிகாரிக்கு, 'இ - மெயில்' மூலம் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி புகார் அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
இந்தியாவின் தேசிய பறவையான மயிலின் இறகுகள் மூலம் செய்யப்பட்ட மாலையை, முன்னாள் அமைச்சர் சிவானந்த நாயக் அணிந்து உள்ளார். இது பொது மக்களுக்கு தவறான தகவலை அளிக்கும்.
வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை அவர் மீறி உள்ளார். எங்கிருந்து அந்த மயில் இறகு மாலை வந்தது என்பதை கண்டறித்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து, சிவானந்த நாயக் கூறியதாவது:
பெங்களூரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட சில இளைஞர்கள் என்னை சந்திக்க வந்தனர்.
எனக்கு தலைப்பாகை அணிவித்து, மயில் இறகு மாலையை அணிவித்தனர். அதன் மீது நான் கவனம் செலுத்தவில்லை.
யாரோ புகார் அளித்துள்ளனர் என்று கூறிய பின்னரே, எனக்கு தெரிந்தது. வனத்துறை அதிகாரிகள் விசாரிக்க வந்தால், அவர்களிடம் ஒப்படைத்து விடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.