/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏரிக்கரை வழியாக தப்பிய ரூ.7 கோடி கொள்ளையர்கள் சுங்கச்சாவடியில் சிக்காமல் இருக்க தந்திரம்
/
ஏரிக்கரை வழியாக தப்பிய ரூ.7 கோடி கொள்ளையர்கள் சுங்கச்சாவடியில் சிக்காமல் இருக்க தந்திரம்
ஏரிக்கரை வழியாக தப்பிய ரூ.7 கோடி கொள்ளையர்கள் சுங்கச்சாவடியில் சிக்காமல் இருக்க தந்திரம்
ஏரிக்கரை வழியாக தப்பிய ரூ.7 கோடி கொள்ளையர்கள் சுங்கச்சாவடியில் சிக்காமல் இருக்க தந்திரம்
ADDED : நவ 24, 2025 03:38 AM

சித்தாபுரா: பெங்களூரில் ஏ.டி.எம்., வேனில் இருந்து 7.11 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் கைதானவர்கள், சுங்கச்சாவடி வழியாக சென்றால் சிக்கி கொள்வோம் என்ற பயத்தில், ஏரிக்கரையில் காரை ஓட்டி சென்றதும், பாழடைந்த வீட்டில் பணத்தை பதுக்கியதும் தெரியவந்து உள்ளது.
பெங்களூரில் தனியார் வங்கிக்கு சொந்தமான 7.11 கோடி ரூபாயை, சி.எம்.எஸ்., என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம்., வேனில் இருந்து கொள்ளையடித்து சென்ற வழக்கில், சி.எம்.எஸ்., நிறுவன வாகன பொறுப்பாளர் கோபி என்ற கோபால், முன்னாள் ஊழியர் சேவியர், போலீஸ் ஏட்டு அன்னப்பா நாயக், ஆந்திராவின் சித்துாரை சேர்ந்த ரவி, நவீன், நெல்சன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
பாரில் பழக்கம் இந்த வழக்கில் ரவியின் தம்பி ராகேஷ் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு சித்தாபுரா போலீசில் சரண் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 6 கோடியே 29 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 82 லட்சம் ரூபாயுடன் தலைமறைவாக உள்ள தினேஷ் என்பவரை, போலீசார் தேடிவருகின்றனர்.
வழக்கு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. வழக்கின் மூளை என்று கூறப்படும் ரவி, பெங்களூரு கல்யாண்நகரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தினார். தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், நிறுவனத்தை மூடிவிட்டு வேலையின்றி வீட்டில் இருந்தார்.
ரவி, சேவியர், கோபி நண்பர்கள் ஆவர். கடந்த சில மாதங்களுக்கு முன் பாரில் வைத்து சேவியருக்கும், ஏட்டு அன்னப்பா நாயக்கிற்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது இருந்து இருவரும் நண்பர்கள் ஆகினர்.
வாடகை கார் சி.எம்.எஸ்., நிறுவன வாகன கண்காணிப்பாளர் கோபிக்கு, மாத சம்பளமாக 17,000 ரூபாய் மட்டுமே கிடைத்து உள்ளது. அவருக்கு நிறைய கடனும் இருந்தது. நிறுவனத்தில் இருந்து வங்கிகளுக்கு, நிறைய பணம் அனுப்பி வைக்கப்படுவது பற்றி கோபி, தனது நண்பர்கள் சேவியர், ரவியிடம் கூறினார். மூன்று பேரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க நினைத்தனர்.
அன்னப்பா நாயக் போலீஸ் துறையில் இருப்பதால், அவரையும் தங்கள் திட்டத்தில் சேர்த்து கொண்டனர். பணத்தை கொள்ளையடிப்பது எப்படி; மாட்டி கொள்ளாமல் தப்பிப்பது எப்படி என்று அவரிடம் ஆலோசனை கேட்டு உள்ளனர். நகரில் எங்கெங்கு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன; எந்த வழியில் சென்றால் போலீசில் சிக்காமல் தப்பிக்கலாம் என்று, அன்னப்பா நாயக் விளக்கமாக கூறி இருக்கிறார்.
கொள்ளையடிக்க பயன்படுத்திய இன்னோவா காரை, பானஸ்வாடியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து, போலீஸ் பணிக்கு என்று கூறி அன்னப்பா நாயக் வாடகைக்கு வாங்கி வந்துள்ளார். பணத்தை கொள்ளையடித்த பின், ஹொஸ்கோட் வழியாக ஆந்திராவுக்கு தப்பி சென்று உள்ளனர். வழியில் ஹொஸ்கோட் சுங்கச்சாவடி உள்ளது.
ஸ்டிக்கர் கிழிப்பு அந்த வழியாக சென்றால் சிக்கி கொள்வோம் என்ற பயத்தில், சுங்கச்சாவடிக்கு முன்பு 300 மீட்டர் துாரத்தில் இடது பக்கம் திரும்பி ஏரிக்கரை வழியாக, காரை ஓட்டி சென்று உள்ளனர். ஏரிக்கரையில் காரை நிறுத்தி கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருந்த கவர்மென்ட் ஆப் இந்தியா ஸ்டிக்கரை கிழித்ததுடன், வாகன பதிவெண்ணையும் மாற்றி உள்ளனர்.
பின், ஏரிக்கரை பகுதியில் இருந்த பாழடைந்த வீட்டிற்கு சென்று 5.56 கோடி ரூபாயை பதுக்கி வைத்தனர். மீதி பணத்துடன் சித்துாருக்கு தப்பினர்.
இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், கமிஷனர் சீமந்த்குமார் சிங்குடன் நேற்று காலை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தனர். போலீஸ் அதிகாரிகளை அவர் பாராட்டினார்.
பின், பரமேஸ்வர் அளித்த பேட்டியில், ''பட்டப்பகலில் 7.11 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால், பெங்களூரின் பெயருக்கு களங்கம் ஏற்பட இருந்தது. ஆனால் நமது போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆறு பேரை கைது செய்து உள்ளனர். 6.29 கோடி ரூபாய் மீட்டு உள்ளனர்.
''கொள்ளையர்களும் கிரிமினலாக செயல்பட்டு இருக்கின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்க போலீசார் கவனமாக இருப்பது அவசியம். இந்த வழக்கில் கைதான ஏட்டு அன்னப்பா நாயக் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்வோம்,'' என்றார்.

