'வறட்சி நிவாரண பணிகளுக்கு பணம் பற்றாக்குறை இல்லை'
'வறட்சி நிவாரண பணிகளுக்கு பணம் பற்றாக்குறை இல்லை'
ADDED : ஜூலை 23, 2026 11:12 PM

பெங்களூரு: ''வறட்சியை எதிர்க்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நிவாரண பணிகளுக்கு அரசிடம் பணம் பற்றாக்குறை இல்லை,'' என, துணை முதல்வர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வறட்சி சூழ்நிலையை எதிர்க்கொள்ள, ஒவ்வொரு தொகுதிக்கும், தலா, ஒரு கோடி ரூபாய் நிதி, குடிநீர் வழங்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலா ஐந்து கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளோம். வறட்சி நிவாரண பணிகளுக்கு, பணம் பற்றாக்குறை இல்லை.
அனைத்து மாவட்ட அளவில், முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.பெங்களூரில் இம்மாதம் 25ம் தேதியன்று, நானும், முதல்வரும் கூட்டம் நடத்துவோம். அதன் பின், மைசூரில் நடத்தப்படும். அப்போது தான் வறட்சி பாதிப்பு குறித்து, எங்களுக்கு தெளிவாக தெரிய வரும்; நிவாரண பணிகளை துரிதப்படுத்துவோம்.
மக்கள் பிழைப்பு தேடி, வேறு இடங்களுக்கு புலம் பெயர்வதை கட்டுப்படுத்த, விபி - ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு அளிக்கும்படி, அனைத்து மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
மாநில அரசில் பணம் பற்றாக்குறை இல்லை. விரைவில் பணிகளை துவக்கும்படி கூறியுள்ளோம். இது குறித்து, மத்திய அரசுக்கும் நாங்கள் கடிதம் எழுதினோம். இதுவரை பதில் வரவில்லை. வறட்சி பாதிப்பு குறித்து, அறிக்கை அளித்தால் மத்திய அரசிடம் இருந்து, நிதியுதவி வரும்.
தென் மேற்கு பருவ மழை காலத்தில், ஓரளவு மழை பெய்ததால், விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அதன்பின் மழை பெய்யாததால், பயிர்கள் வாடிவிட்டன. ஆகஸ்டில் மழை பெய்தால் பயிரிடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
