/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐகோர்ட் தீர்ப்பால் திம்மரோடி நிம்மதி
/
ஐகோர்ட் தீர்ப்பால் திம்மரோடி நிம்மதி
ADDED : நவ 18, 2025 04:51 AM

பெங்களூரு: ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடியை தட்சிண கன்னடா மாவட்டத்திலிருந்து வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தர்மஸ்தலா வழக்கின் மூலம் பிரபலமான ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதுமட்டுமின்றி, தர்மஸ்தலா வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக எஸ்.ஐ.டி., அதிகாரிகள் இவர் மீது குற்றம் சாட்டினர்.
இதனால், மகேஷ் திம்மரோடியை தட்சிண கன்னடா மாவட்டத்தை விட்டு வெளியேற்ற புத்துார் கூடுதல் கமிஷனர் ஸ்டெல்லா வர்கீஸ், செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து திம்மரோடி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நேற்று நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் கூறியதாவது:
மனுதாரரை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்கிறது.
இடம் கடத்துவதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் மறுவிசாரணை நடத்தி, 15 நாட்களுக்குள் மறு உத்தரவு பிறப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால், மகேஷ் திம்மரோடிக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்து உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

