/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உணவு தேடி வந்து பள்ளத்தில் விழுந்த புலி குட்டி மீட்பு
/
உணவு தேடி வந்து பள்ளத்தில் விழுந்த புலி குட்டி மீட்பு
உணவு தேடி வந்து பள்ளத்தில் விழுந்த புலி குட்டி மீட்பு
உணவு தேடி வந்து பள்ளத்தில் விழுந்த புலி குட்டி மீட்பு
ADDED : ஜூலை 10, 2025 04:01 AM

மைசூரு: உணவு தேடி தாயுடன் வந்து, 20 அடி பள்ளத்தில் விழுந்த ஆறு மாத ஆண் புலிக்குட்டி மீட்கப்பட்டு, மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மைசூரு மாவட்டம், சரகூர் மண்டலத்துக்கு உட்பட்ட பிதகலு கிராமத்தை சேர்ந்தவர் நவீன். நேற்று காலை வயலுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் அவருக்கு, புலியின் சத்தம் கேட்டுள்ளது.
அச்சமடைந்த அவர், சுற்றிப்பார்த்தார், புலி தென்படவில்லை. 15 முதல் 20 அடி உயரம் கொண்ட கோபர் காஸ் எனும் சாண எரிவாயு பள்ளத்தில் இருந்து சத்தம் வருவதை கவனித்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு புலிக்குட்டி விழுந்திருந்ததை கண்டார். வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு கால்நடை மருத்துவர், அதிகாரிகள் வந்தனர். உணவு தேடி வந்த புலி, பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று யூகித்தனர். புலிக்கு துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின், பள்ளத்தில் இறங்கி, புலியை மீட்டு, கூர்கள்ளியில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு சென்றனர்.
ஆறு மாதங்களே ஆன ஆண் புலிக்குட்டி என வனத்துறையினர் தெரிவித்தனர். அதன் தாய் புலி சரகூர் மண்டலத்தில் இருக்கும். எனவே, புலிக்கு சிகிச்சை அளித்து, தாய் புலியுடன் சேர்ப்பதா, குறிப்பிட்ட வயது வரை மிருகக்காட்சி சாலையில் வைத்து பராமரித்த பின், வனப்பகுதியில் விடுவதா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.