துப்புரவு பணியாளர்களுக்கு ஆய்வு சுற்றுலா திடக்கழிவு நிர்வகிப்பு ஆணையம் திட்டம்
துப்புரவு பணியாளர்களுக்கு ஆய்வு சுற்றுலா திடக்கழிவு நிர்வகிப்பு ஆணையம் திட்டம்
ADDED : ஜூலை 21, 2026 02:56 AM
பெங்களூரு: பெங்களூரில் முதன் முறையாக, துப்புரவு பணியாளர்களை சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு நடக்கிறது.
பெங்களூரின் திடக்கழிவு நிர்வகிப்பு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
துாய்மை குறித்து பயிற்சியளிக்கும் நோக்கில், பெங்களூரின் துப்புரவு பணியாளர்களை, சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம். மைசூரு, ஹொஸ்பேட், தாவணகெரே, மங்களூரு உட்பட கர்நாடகாவின் ஆறு நகரங்களுக்கு, 18,000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் அழைத்து செல்லப்படுவர்.
அந்தந்த நகரங்களில், திடக்கழிவு நிர்வகிப்பு, துாய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்வர். துப்புரவு குறித்து அங்கு செயல்படுத்தப்படும் நடைமுறைகள், பெங்களூரில் செயல்படுத்தப்படும். திடக்கழிவு நிர்வகிப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு, கர்நாடகாவின் வெளியே உள்ள மாநிலங்களுக்கு அதிகாரிகள் சுற்றுப்பயணம் செல்வர். அதேபோன்று துப்புரவு பணியாளர்கள், கர்நாடகாவுக்குள் சுற்றுப்பயணம் அழைத்து செல்லப்படுவர்.
துப்புரவு பணியாளர்களின் திறனை அதிகரிக்க, இந்த சுற்றுப்பயணம் உதவியாக இருக்கும்.
அதிநவீன முறையில் கழிவுகளை தரம் பிரிப்பது, பாதுகாப்பு வழிமுறைகள், மறு சுழற்சி என, அந்தந்த நகரங்கள் செயல்படுத்தும் பணிகளை, துப்புரவு பணியாளர்கள் தெரிந்து கொள்வர். குழுக்களாக அழைத்து செல்லப்படுவர். இம்மாதம் இத்திட்டம் துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
