சுற்றுலா பயணியர் சாகசம் நீர்வீழ்ச்சிகளில் அபாயம்
சுற்றுலா பயணியர் சாகசம் நீர்வீழ்ச்சிகளில் அபாயம்
ADDED : ஜூலை 21, 2026 02:56 AM

குடகு: மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணியர், அலட்சியமாக நடந்து கொள்வது, அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
குடகு மாவட்டத்தின் மடிகேரி, விராஜ்பேட், சோம்வார்பேட் உட்பட அனைத்து தாலுகாக்களிலும் அழகான, இயற்கை எழில் சூழ்ந்த நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தற்போது இப்பகுதிகளில் மழை பெய்வதால், நீர் வீழ்ச்சிகளில் நீர் பெருக்கெடுத்துள்ளது. இது, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
இவர்கள் இயற்கை அழகை ரசித்துவிட்டு செல்வது இல்லை. சிலர் தங்களின் உயிரை பணயம் வைத்து, சாகசங்களில் ஈடுபடுகின்றனர். குடகின் பிரசித்தி பெற்ற அப்பே, மேதுரா, சூர்லப்பி நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். ஆழம் தெரியாமல் நீருக்குள் இறங்கி நீச்சல் அடிக்கின்றனர். வழுக்கும் அபாயமான பாறைகள் மீது ஏறி நின்று செல்பி, வீடியோ எடுக்கின்றனர்.
உள்ளூர் மக்களின் எச்சரிக்கையையும் பொருட்படுத்துவது இல்லை. இதற்கு முன் இதே நீர் வீழ்ச்சிகளில் குளிக்கும் போது, சுழலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். நீரில் விழுந்த சிலரை உள்ளூர் மக்கள், தங்களின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய உதாரணங்கள் உள்ளன.
இவர்களின் செயல், போலீஸ் அதிகாரிகள், சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கும்படி, உள்ளூர் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
