UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 09:24 PM
தட்சிணகன்னடா: தன் தோழியை கொலை செய்ய முயற்சித்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.
தட்சிணகன்னடா மாவட்டம், கடபா கோனாஜே கிராமத்தில் வசிப்பவர் பிரசாத், 28. இவரும், உப்பினங்கடியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணும், மூன்று ஆண்டுகளாக நண்பர்கள். நவம்பர் 4ம் தேதியன்று மாலை, பிரசாத் அந்த பெண்ணை உப்பினங்கடியில் இருந்து, தன் காரில் அழைத்து சென்றார்.
கல்குன்டா வழியாக, பிசிலேகாட்டுக்கு வந்தார். அன்றிரவு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், இரும்பு ராடால் பெண்ணை கண் மூடித்தனமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அப்பெண், மயங்கி விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக நினைத்து, அங்கேயே விட்டு விட்டு பிரசாத் தப்பினார்.
மறுநாள் காலை பெண்ணுக்கு நினைவு திரும்பியது. அப்பகுதியினர் உதவியுடன் சுப்ரமண்யாவுக்கு வந்து மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்றார். அதன்பின் சுப்ரமண்யா போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்த சம்பவத்தை விவரித்து புகார் அளித்தார். போலீசார் பிரசாத்தை நேற்று கைது செய்தனர். என்ன காரணத்தால், தோழியை கொலை செய்ய முயற்சித்தார் என, விசாரணை நடத்துகின்றனர்.
