/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குப்பை சேகரிப்பு பிரச்னைக்கு துமகூரு மாநகராட்சி புதிய திட்டம்
/
குப்பை சேகரிப்பு பிரச்னைக்கு துமகூரு மாநகராட்சி புதிய திட்டம்
குப்பை சேகரிப்பு பிரச்னைக்கு துமகூரு மாநகராட்சி புதிய திட்டம்
குப்பை சேகரிப்பு பிரச்னைக்கு துமகூரு மாநகராட்சி புதிய திட்டம்
ADDED : ஜூலை 19, 2025 11:01 PM
துமகூரு: வீடுகளில் குப்பை சேகரிக்க, 'பைலட் பிராஜெக்ட்' என்ற திட்டத்தை துமகூரு மாநகராட்சி வகுத்துள்ளது. ஸ்விக்கி, ஜுமாட்டோ, ப்ளிங்கிட் போன்று, டெலிவரி பாய்கள் வீடு வீடாக சென்று குப்பை சேகரித்து செல்வர்.
இதுகுறித்து, துமகூரு மாநகராட்சி கமிஷனர் அஸ்விஜா கூறியதாவது:
பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்கின்றனர். இவர்களால் காலை வீட்டு வாசலுக்கு வரும் குப்பை வாகனங்களில் குப்பையை கொட்ட முடிவதில்லை.
வீடுகளில் குப்பை தேங்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண, துமகூரு மாநகராட்சி 'பைலட் பிராஜெக்ட்' என்ற பெயரில் திட்டம் வகுத்துள்ளது.
இதற்காக மொபைல் செயலியை, மாநகராட்சி வடிவமைத்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்து, பொருட்களை வீட்டு வாசலுக்கு வரவழைப்பது போன்று, குப்பை அள்ள ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொண்டால், இவர்களின் வீடுகளுக்கே மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சென்று, குப்பையை பெற்று வருவர்.
துப்புரவு தொழிலாளர்களும், டெலிவரி பாய்ஸ் போன்று பணியாற்றுவர். இவர்களுக்காக ஏற்கனவே 10 பைக்குகளையும், மாநகராட்சி வாங்கியுள்ளது. அடுத்த வாரம் முதல் பைக்குகளில் சென்று குப்பை சேகரிப்பு துவங்கும். சோதனை முறையில் துமகூரின் சில பகுதிகளில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். வெற்றி அடைந்தால் அனைத்து வார்டுகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.
தற்போதைக்கு இலவசமாக குப்பை கொண்டு செல்லப்படும். வரும் நாட்களில் வீடுகளில் கட்டணம் வசூலிக்க ஆலோசிக்கிறோம்.
துமகூரில் வசிக்கும் பலர், பெங்களூரில் பணியாற்றுகின்றனர். தினமும் அதிகாலையே பணிக்கு புறப்படுவதால், குப்பை வாகனங்கள் வரும்போது, அவர்கள் வீட்டில் இருப்பது இல்லை. வாடகை வீடுகள், அறைகளில் வசிக்கும் இளைஞர்களும், குப்பை வாகனங்களில் குப்பை போடுவதில்லை.
சிறு, சிறு கடைகள், சாலையோர வியாபாரிகள் இரவோடு இரவாக கண்ட, கண்ட இடங்களில் குப்பையை வீசுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, மொபைல் அடிப்படையிலான குப்பை சேகரிப்பு திட்டத்தை துவக்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.