ADDED : ஆக 18, 2026 07:50 PM

விஜயபுரா: சொத்துக்காக தந்தையை கொலை செய்து, உடலை சாலையில் வீசிய மகள் கைது செய்யப்பட்டார்.
விஜயபுரா மாவட்டம், இன்டி தாலுகாவின், பஞ்சசீலா நகரில் வசித்தவர் சித்தப்பா அஞ்சுடகி, 62. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இவர் ஆகஸ்ட் 16ம் தேதி காலை, வீட்டின் அருகில் உள்ள சவுடிஹாளா சாலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டிருந்தது.
தகவலறிந்து வந்த இன்டி போலீசார், உடலை மீட்டு, விசாரணையை துவக்கினர். சித்தப்பா அஞ்சுடகி உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, அவரது மூத்த மகள் நிகிதா புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்த போது, இளைய மகள் பிரியங்கா, 30, என்பவரே கொலையாளி என்பது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சித்தப்பா அஞ்சுடகி, பணியில் இருந்து ஓய்வுபெற்ற போது, தனக்கு கிடைத்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார். சில சொத்துகளும் இருந்தன.
விஜயபுராவில் வசிக்கும் மகள் பிரியங்காவுக்கு, ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ் சிந்தே என்பவருடன், முறை தவறிய தொடர்பு இருந்தது. இதை கண்டித்த தந்தை, ஒழுங்காக இல்லாவிட்டால் சொத்துகளில் பங்கு தர முடியாது என்றார்.
சொத்து தொடர்பாக, தந்தைக்கும், மகளுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, அவ்வப்போது சண்டை போட்டனர். ஆகஸ்ட் 15ம் தேதி, சொத்துகளில் பங்கு கேட்டு, பிரியங்கா தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதால், அன்று நள்ளிரவு தன் காதலர் சந்தோஷ் சிந்தேவை, வீட்டுக்கு வரவழைத்தார்.
இருவரும் சேர்ந்து சித்தப்பா அஞ்சுடகியின் கழுத்தை நெரித்தனர். கல்லால் தாக்கி கொலை செய்தனர். அதன்பின் உடலை போர்வையால் சுற்றி, சாலையில் வீசினர்.
பிரியங்கா, சந்தோஷ் சிந்தே நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த கூட்டாளி குருராஜ் பிராதார் தலைமறைவாக உள்ளார். அவரை தேடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
