/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மது பழக்கத்தால் சீரழிந்த குடும்பங்கள் பணம் தர மறுத்த இரு தாய்கள் கொலை
/
மது பழக்கத்தால் சீரழிந்த குடும்பங்கள் பணம் தர மறுத்த இரு தாய்கள் கொலை
மது பழக்கத்தால் சீரழிந்த குடும்பங்கள் பணம் தர மறுத்த இரு தாய்கள் கொலை
மது பழக்கத்தால் சீரழிந்த குடும்பங்கள் பணம் தர மறுத்த இரு தாய்கள் கொலை
ADDED : அக் 18, 2025 04:53 AM

பெங்களூரு: குடிக்க பணம் தர மறுத்த இரண்டு தாய்கள் கழுத்தை அறுத்து மகன்களே கொலை செய்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகர் தாலுகாவின், ஜாலமங்களா கிராமத்தில் வசித்தவர் சரோஜம்மா, 60. இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
இவரது கணவரும், மாற்றுத்திறனாளியான இளைய மகன் காலமாகினர். மூத்த மகன் அனில்குமார், 43. இவர் எந்த வேலைக்கும் செல்லாமல், ஊரை சுற்றினார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.
சரோஜம்மா வீட்டு வேலை, கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். இவரிடம் அவ்வப்போது பணம் கேட்டு, அனில்குமார் தொல்லை கொடுப்பார். சரோஜம்மாவுக்கு சிறிய நிலம் இருந்தது.
அதை விற்க முடிவு செய்த அவர், முன் பணம் வாங்கியிருந்தார். இதை வீட்டில் வைத்திருந்தார்.
இந்த பணத்தைத் தரும்படி அனில்குமார் தொல்லை கொடுத்தார். மறுத்ததால் இருவருக்கும் சண்டை நடந்தது.
நேற்று முன் தினம் மாலையும், இதே காரணத்தால் தாய்க்கும் மகனுக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது அனில்குமார், தாயை கீழே தள்ளி கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
தாயை கொலை செய்த பின், ரத்தம் தோய்ந்த உடையுடன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த ராம்நகர் ஊரக போலீசார், அனில்குமாரை கைது செய்தனர். மது குடிக்க பணம் கொடுக்காததால், தாயை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
பாகல்கோட் நகரின், துளதிகேரி கிராமத்தில் வசித்தவர் ஷாவக்கா, 58. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் இறந்த பின், குடும்பப் பொறுப்பை ஏற்று, பிள்ளைகளை வளர்த்தார். மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். மகள் வேறு ஊரில் கணவருடன் வசிக்கிறார்.
வாடகை வீட்டில் தாயும், மகன் வெங்கடேஷ், 28, வசித்தனர். வெங்கடேஷ் வேலைக்கு செல்லாமல், மது குடித்து ஊரை சுற்றினார். ஷாவக்கா கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தையும் பறித்துச் செல்வார்.
நேற்று முன்தினம் மதியம், தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். தாய் பணம் கொடுக்க மறுத்தார்.
இதனால் கோபமடைந்த மகன், தாயின் கை,கால்களை கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
மாலையாகியும் ஷாவக்கா, வீட்டில் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த அப்பகுதியினர் வீட்டுக்குள் எட்டி பார்த்தபோது, அவர் கொலையாகி கிடப்பது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த துளசிகேரி போலீசார், உடலை மீட்டனர்.
வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடினர். நேற்று காலை கத்தனகேரி கிராசில் உள்ள பாரில், மது குடித்துக் கொண்டிருந்த வெங்கடேஷை போலீசார் கைது செய்தனர்.