/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பன்றிகளை வேட்டையாடிய இரு பாகன்கள் பணியிடை நீக்கம்
/
பன்றிகளை வேட்டையாடிய இரு பாகன்கள் பணியிடை நீக்கம்
ADDED : ஏப் 13, 2025 08:33 AM
மைசூரு : காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய இரு யானை பாகன்களை பணியிடை நீக்கம் செய்து, நாகரஹெளே புலிகள் வனப்பகுதி திட்ட இயக்குநர் சீமா உத்தரவிட்டார்.
மைசூரு, நாகரஹொளேயில் உள்ள காவேரி யானைகள் முகாமில், காட்டுப்பன்றிகளை வேட்டையாட, துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று மார்ச் 18ல் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அன்றைய தினமே ஹூன்சூர் வனப்பகுதி வன அதிகாரி லட்சுமிகாந்த் தலைமையில் அதிகாரிகள், யானை முகாமில் சோதனை நடத்தினர். அப்போது, இரு யானை பாகன்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு துப்பாக்கியையும், விலங்குகளை பிடிக்க பயன்படுத்தும் கருவியையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பாகன்கள் எச்.என்.மஞ்சு, ஜே.டி.மஞ்சு ஆகியோரிடம் விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டனர். மார்ச் மாதத்தில், பிரியாபட்டணாவின் நெரலகுப்பே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு மஞ்சு என்பவருக்காக, வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட உதவியதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக அறிக்கையை, நாகரஹொளே புலிகள் வனப்பகுதி இயக்குநர் சீமாவிடம் சமர்ப்பித்தார்.
சீமா கூறுகையில், ''இரு பாகன்களும் பன்றியை வேட்டையாட உதவி உள்ளனர். இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மஞ்சுவை தேடி வருகிறோம். இருவரும் வேறு ஏதாவது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது,'' என்றார்.

