/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காஸ் சிலிண்டர் வெடித்து இருவர் உடல் கருகி பலி
/
காஸ் சிலிண்டர் வெடித்து இருவர் உடல் கருகி பலி
ADDED : மே 02, 2025 05:42 AM
நெலமங்களா: பல்லாரியை சேர்ந்தவர் நாகராஜ், 42. இவரது மனைவி லட்சுமி தேவி, 35. இந்த தம்பதிக்கு பசனகவுடா, 19, அபிஷேக், 18 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே அடகமாரனஹள்ளியில், நாகராஜ் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்தார். கூலி வேலைக்கு சென்றார்.
நேற்று காலை 7:00 மணிக்கு நாகராஜ் வேலைக்கு புறப்பட்டார். வீட்டில் இருந்த விளக்கை ஏற்றி சாமி கும்பிட்டார். அப்போது வீட்டின் காஸ் சிலிண்டர் தீர்ந்தது; புதிய காஸ் சிலிண்டரை அவரது மகன் அபிஷேக் இணைத்து கொண்டு இருந்தார்.
இந்த நேரத்தில் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென வேகமாக பரவி பக்கத்து வீட்டிலும் பற்றியது. அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
வீடுகளுக்குள் சென்று பார்த்த போது இருவர் இறந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் நாகராஜ், பக்கத்து வீட்டுக்காரர் சீனிவாஸ், 50 என்பது தெரியவந்தது. நான்கு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.