/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உபேந்திரா - பிரியங்கா மொபைல் எண் 'ஹேக்'
/
உபேந்திரா - பிரியங்கா மொபைல் எண் 'ஹேக்'
ADDED : செப் 16, 2025 05:09 AM

பெங்களூரு: தங்கள் மொபைல் போன் எண்களை, 'ஹேக்' செய்த மர்ம நபர்கள், தங்கள் பெயரில் பண உதவி கேட்டு மோசடி செய்து வருவதாக பிரபல நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்கா புகார் அளித்துள்ளனர்.
கன்னட திரையுலகில் பிரபல நட்சத்திர தம்பதி, உபேந்திரா - பிரியங்கா. நேற்று இருவரும் பெங்களூரின் சதாசிவ நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தங்கள் மொபைல் எண்கள் 'ஹேக்' செய்யப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, உபேந்திரா கூறியதாவது:
என் மனைவி பிரியங்கா, 'ஆன்லைனில் பர்னீச்சர் ஆர்டர்' செய்திருந்தார். நேற்று காலை, அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய நபர், 'டெலிவரி கோடு' கூறும்படி கேட்டார். பிரியங்காவும் கூறினார்.
அடுத்த சில விநாடிகளில் அவரது மொபைல், 'ஹேங்க்' ஆனது. வேலை செய்யவில்லை. அந்த நேரத்தில், எங்களின் தொடர்பு பட்டியலில் இருக்கும் நண்பர்கள், அறிமுகம் உள்ளவர்களுக்கு, 'நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறோம். பண உதவி தேவைப்படுகிறது. உதவி செய்யுங்கள்' என்ற மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
சிலர் ஆயிரக்கணக்கிலும், சிலர் லட்சக்கணக்கிலும் அனுப்பியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த பணத்தை தங்கள் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.
முதலில் என் மொபைல் எண்ணும், அடுத்து என் மனைவி பிரியங்காவின் மொபைல் போன் எண்ணும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எங்களின் மொபைல் எண்கள், சைபர் குற்றவாளிகளால், 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் பெயரில், யாராவது பணம் கேட்டால் அனுப்பாதீர்கள். எங்கள் மொபைல் எண்ணில் இருந்து, எந்த மெசேஜ் வந்தாலும் நம்பாதீர்கள். பணமும் அனுப்பாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.