/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உத்தண்டி அம்மன் கோவில் உண்டியலுக்கு 'சீல்'
/
உத்தண்டி அம்மன் கோவில் உண்டியலுக்கு 'சீல்'
ADDED : ஏப் 07, 2025 10:36 PM

தங்கவயல்; தங்கவயல் பழைய மாரிகுப்பம் கிராமத்தின் உத்தண்டி அம்மன் கோவில் உண்டியலுக்கு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர்.
தங்கவயலில் உள்ள சோழர் காலத்து கோவில்களில் பழமையானது மாரி குப்பம் கிராமத்தில் உள்ள உத்தண்டி அம்மன் கோவில். கர்நாடக அரசின் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் கிராமத்தினர் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். கிராம மக்களே கோவில் திருவிழாவுக்கான செலவை நன்கொடை பெற்று நடத்தி வருகின்றனர்.
இக்கோவிலின் வரவு - செலவை தனி நபர் ஒருவர் தன்னிச்சையாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவிழாவின்போது, இரு கோஷ்டியினர் மத்தியில் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து, தங்கவயல் தாசில்தாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம பஞ்சாயத்து அதிகாரி, வருவாய்த் துறை அதிகாரிகளை தாசில்தார் நாகவேணி அனுப்பி வைத்தார்.
அவர்கள் நேற்று கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவிலின் உண்டியலுக்கு 'சீல்' வைத்தனர்.
''திருவிழா சுமூகமாக நடத்த வேண்டும். திருவிழாவுக்குப் பிறகு, இக்கோவிலுக்கு ஒரு கமிட்டி ஏற்படுத்தப்படும். கோவில் பொறுப்பை அரசு கவனிக்கும்,'' என, தாசில்தார் நாகவேணி தெரிவித்தார்.

