/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இன்னல்களை நீக்கும் வீரபத்ரேஸ்வர சுவாமி
/
இன்னல்களை நீக்கும் வீரபத்ரேஸ்வர சுவாமி
ADDED : ஜூலை 07, 2025 11:07 PM

கடந்த 13ம் நுாற்றாண்டில் துமகூரு மாவட்டம், மதுகிரியின் பிஜாவராவில் உள்ள அர்ச்சகர் ஒருவரின் கனவில் தோன்றிய வீரபத்ரேஸ்வர சுவாமி, 'உன்னை தேடி பக்தன் வருவான். அவன் கூறும் இடத்துக்கு செல். அங்கு இருக்கும் என்னை இங்கு பிரதிஷ்டை செய்' என்று கூறி மறைந்தார்.
சில நாட்களுக்கு பின், அங்கு வந்த நபர், அர்ச்சகரிடம் கூறி, அவரை அழைத்து சென்றார். கனவில் கூறியபடியே வீரபத்ரசுவாமி சிலை கிடைத்தது. அதை இங்கு கொண்டு வந்து, 1329ல் பிரதிஷ்டை செய்தனர்.
துமகூரு பகுதியை மேற்கு கங்க மன்னர்கள், ராஷ்டிரகூடர்கள், சாளுக்கியர்கள் என, பல ராஜ்ஜியத்தின் மன்னர்கள் ஆண்டு வந்தனர். அதன்பின், 13ம் நுாற்றாண்டில் இருந்து 17ம் நுாற்றாண்டு வரை விஜயநகர பேரரசர்கள் ஆண்டு வந்தபோது, கோவில் அபிவிருத்தி செய்யப்பட்டது.
கடந்த 1565ல் விஜயநகரை கைப்பற்றிய டில்லி சுல்தான்களுக்கு, மதுகிரி பிஜாவராவில் உள்ள இக்கோவிலில் திருவிழாக்கள் விமரிசையாக நடப்பதாக தகவல் கிடைத்தது.
விஜயநகரத்தில் கிடைத்த பொன், பொருட்கள் போன்று, இங்கும் கிடைக்கும் என்று எண்ணி, 1567ல் இங்கு படையெடுத்தனர். அப்போது இப்பகுதியின் பாளையக்காரராக இருந்த கரிதிம்ம சிக்கப்ப கவுடர், சென்னபட்டணாவில் இருந்த விஜயநகர பேரரசின் பிரதிநிதியான ஜெகதேவராயருடன் பேசினார்.
இருவரும் சேர்ந்து எதிரி படையுடன் போரிட்டு, டில்லி சுல்தானை தோற்கடித்து, இப்பகுதியை பாதுகாத்தனர். இதற்கு வீரபத்ரசுவாமியின் ஆசி காரணம் என்று கரிதிம்ம சிக்கப்ப கவுடர் எண்ணினார்.
அதுபோன்று, ஹம்பியில் டில்லி சுல்தான்கள் போர் தொடுத்தபோது, அங்கிருந்த பெரும்பாலான மக்கள், மைசூரு, துமகூரில் குடியேறினர்.
இக்கோவில் அருகிலேயே, காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவலிங்கத்தை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
வீரபத்ரேஸ்வர சுவாமியை தரிசிக்கும் மக்கள், பல நன்மைகள் அடைந்து உள்ளனர். ஆண்டுதோறும் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கன்னட ஷ்ராவன மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை ரத உற்சவம் நடக்கும்.
கோவிலில் நடக்கும் அனைத்து பண்டிகை விசேஷ நாட்களிலும், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வருகை தருவர். வெளி மாவட்டங்களில் இருக்கும் இவ்வூரை சேர்ந்தவர்களும், இவ்விழா நாட்களில் இங்கு கூடுவர். காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்
- நமது நிருபர் -.