காய்கறி விலை கிடுகிடு உயர்வு: மார்க்கெட்களுக்கு வரத்து குறைவு
காய்கறி விலை கிடுகிடு உயர்வு: மார்க்கெட்களுக்கு வரத்து குறைவு
ADDED : ஜூன் 25, 2026 10:39 PM

பெங்களூரு: விளைச்சல் குறைந்ததால், பெங்களூரில் காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இப்போதே முதன் முறையாக வெள்ளை கத்திரிக்காயின் விலை, 100 ரூபாயை தாண்டியுள்ளது.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக, காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தக்காளி, வெங்காயம் மட்டும் கைக்கு எட்டும் விலையில் கிடைக்கிறது.
முருங்கைக்காய் விலை, கிலோ, 200 ரூபாயில் இருந்து, 220 ரூபாய்; பீன்ஸ் 115 ரூபாயில் இருந்து 140 ரூபாய்; வெள்ளை கத்திரிக்காய் 110 லிருந்து, 120 ரூபாய்; குடமிளகாய், கேரட் 80 லிருந்து 100 ரூபாய்; பூண்டு 200 லிருந்து 220 ரூபாயாக அதிகரித்துள்ளது .
பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு என, பல்வேறு காய்களின் விலையும் சாமானியர் வாங்கும் அளவில் இல்லை. காய்கறிகள் மட்டுமின்றி வெந்தய கீரை, சிறுகீரை, அரைக்கீரை உட்பட, மற்ற கீரைகளின் விலையும், மிக அதிகமாக உள்ளது. இதுவரை கிலோ கணக்கில் காய்கறி வாங்கியவர்கள், இப்போது கால் கிலோ, அரை கிலோ வாங்குகின்றனர்.
இதற்கிடையே, முட்டை விலையும், 6.50 ரூபாயில் இருந்து, எட்டு ரூபாயாக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் சில மாவட்டங்களில், அதிக மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், சில இடங்களில் சரியான நேரத்தில், மழை பெய்யாததாலும், காய்கறி விளைச்சல் பாழானது.
எனவே, பெங்களூரின் மார்க்கெட்டுகளுக்கு வரத்து குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம். மழை பெய்து புதிய விளைச்சல் வரும் வரை, விலை குறைய வாய்ப்பில்லை என, வியாபாரிகள் கூறுகின்றனர்.
