ADDED : ஜூன் 07, 2026 11:40 PM

புட்டபர்த்தி: ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையம் சென்ற வெனிசுலா அதிபர் டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ், ஸ்ரீ சத்ய சாய்பாபா சன்னிதியில் நேற்று வழிபட்டார்.
ஆந்திராவின் புட்டபர்த்தியில் ஆன்மிக குருவான பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிரசாந்தி நிலையம் அமைந்துள்ளது. இது, 'அமைதியின் உயர்ந்த கோவில்' என அறியப்படுகிறது. உலகம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள், இங்குள்ள ஸ்ரீ சத்ய சாய்பாபா சன்னிதிக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
அரசு முறை பயணம் இந்நிலையில், ஐந்து நாள் அரசு முறை பயணமாக நம் நாட்டிற்கு வந்த தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நேற்று முன்தினம் புட்டபர்த்தி சென்றார்.
விமான நிலையத்தில் அவரை, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர், அறக்கட்டளை உறுப்பினர் மனோகர் ஷெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இது குறித்து, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
வெனிசுலா நாட்டின் இடைக்கால அதி பர் டெல்சி ரோட்ரிக்ஸ் இரண்டு நாள் பயணமாக புட்டபர்த்தி வந்தார்.
பிரசாந்தி நிலையத்தில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா சன்னிதியில் நேற்று முன்தினம் அவர் மரியாதை செலுத்தினார்; பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
ஆன்மிக மையத்தில் நேற்று நடந்த சிறப்பு பஜனைகள் மற்றும் பிரார்த்தனையிலும் ரோட்ரிக்ஸ் பங்கேற்றார்.
நினைவு பரிசு மங்கள ஆரத்திக்கு பின், சிறிது நேரம் அமைதியாக அவர் தியானத்தில் ஈடுபட்டார். பின், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அதிபர் கலந்துரையாடினார்.
அவருக்கு, அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் புகைப் படம் அடங்கிய நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அன்பு, அமைதி மற்றும் தன்னலமற்ற சேவை மீது அதிக ஈடுபாடு கொண்ட அதிபர் ரோட்ரிக்ஸ், இதற்கு முன்னரும் பிரசாந்தி நிலையத்துக்கு வருகை தந்துள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
