லால்பாக் பூங்காவில் சுரங்க பணிகள் நடைபயிற்சியாளர்கள் சங்கம் எதிர்ப்பு
லால்பாக் பூங்காவில் சுரங்க பணிகள் நடைபயிற்சியாளர்கள் சங்கம் எதிர்ப்பு
ADDED : ஆக 02, 2026 11:08 PM
பெங்களூரு: 'லாக்பாக் பூங்காவின் பாறையை உடைத்து, சுரங்க சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை' என, நடை பயிற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று போராட்டம் நடத்தினர்.
பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், ஹெப்பால் ஜங்ஷனில் இருந்து, சென்ட்ரல் சில்க் போர்டு வரை, 16 கி.மீ., தொலைவிற்கு, சுரங்க சாலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, இந்த திட்டத்தில் முதல்வர் சிவகுமார் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால், இத்திட்டத்துக்கு, பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த சுரங்க சாலை, லால்பாக் பூங்காவை கடந்து செல்லும். பூங்காவிற்கு, 100 அடி கீழே, எக்ஸ்பிரஸ் ஹைவே போல, சுரங்கச்சாலை அமைப்பது அரசின் எண்ணமாகும். பூங்காவில் உள்ள பாறையை குடைந்து, பணிகள் நடத்தப்படும். இதற்கு பொது மக்கள், நடை பயிற்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லால்பாக் பூங்கா நடை பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில், 'லால்பாக் பூங்காவை காப்பாற்றுங்கள்' என, நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் பங்கேற்றனர். 'லாக்பாக் பூங்காவில் சுரங்க சாலை வேண்டாம்' என, கோஷமிட்டனர். 'வரலாற்று சிறப்பு மிக்க லால்பாக்கின் கீழே, பாறையை உடைத்து, சுரங்க சாலை அமைக்க தேவையில்லை' என்றனர்.
நடைபயிற்சியாளர்கள் சங்க தலைவர் உமேஷ் கூறியதாவது:
லால்பாக் பூங்கா, வரலாற்று சிறப்பு மிக்கது. இத்தகைய சிறப்பு மிக்க இடத்தில், சுரங்க சாலை அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். திட்டத்தை முதல்வர், உடனடியாக திரும்ப பெற வேண்டும். மக்களின் வசதிக்காக, இத்திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாழாக கூடாது.
லால்பாக் பூங்காவை விட்டு, வேறு இடத்தில் பணிகளை நடத்தட்டும். பூங்கா பகுதியில் பணிகளை நடத்த கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
