/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர் விடுதியில் முறைகேடு வார்டன் ' சஸ்பெண்ட் '
/
மாணவர் விடுதியில் முறைகேடு வார்டன் ' சஸ்பெண்ட் '
ADDED : செப் 05, 2025 11:03 PM
பெங்களூரு:சமூக நலத்துறைக்கு உட்பட்ட ராய்ச்சூரு மாணவர் விடுதியில் முறைகேடு நடந்துள்ளது. எனவே விடுதி வார்டனை 'சஸ்பெண்ட்' செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
ராய்ச்சூர் நகரில், சமூக நலத்துறைக்கு உட்பட்ட விடுதி, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு முறைகேடுகள் நடக்கின்றன.
மாணவர்களுக்கு சரியான வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதை தீவிரமாக கருதிய உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, ஆகஸ்ட் 28ம் தேதி, இரவு 8:00 மணிக்கு விடுதிக்கு திடீர் வருகை தந்து, ஆய்வு செய்தார்.
பயோ மெட்ரிக் வருகை பதிவின்படி, 159 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அங்கு 427 மாணவர்கள் இருப்பது தெரிந்தது.
மாணவர்களின் வசதிக்காக மாநில அரசு, ஹாஸ்டலுக்கு தேவையான நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதி தவறாக பயன்படுத்தியது, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
விடுதி துாய்மையாக நிர்வகிக்கப்படவில்லை. அடிப்படை வசதிகளும் இருக்கவில்லை. உணவும் தரமாக இல்லை.
இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாணவர்களை, விடுதி வார்டன் குண்டர்களை அனுப்பி தாக்கியதாக, நீதிபதி வீரப்பாவிடம், மாணவர்கள் விவரித்தனர்.
மாணவர்களுக்கு மெத்தை, போர்வை, தலையணை, கொசு வலை, டிராக்சூட், புத்தகங்கள் என, எதுவும் வழங்கப்படவில்லை.
இதை கண்டு கோபமடைந்த நீதிபதி வீரப்பா, ராய்ச்சூர் எஸ்.பி.,யை தொடர்பு கொண்டு, 'விடுதியை அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.
விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதன்படி தலைமை செயல் நிர்வாக அதிகாரி ஈஸ்வர் குமார், வார்டன் தேவராஜை 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று முன் தினம் உத்தரவிட்டார்.