/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குப்பை லாரியில் பெண் உடல் பலாத்காரம் செய்து கொலையா?
/
குப்பை லாரியில் பெண் உடல் பலாத்காரம் செய்து கொலையா?
குப்பை லாரியில் பெண் உடல் பலாத்காரம் செய்து கொலையா?
குப்பை லாரியில் பெண் உடல் பலாத்காரம் செய்து கொலையா?
ADDED : ஜூன் 29, 2025 11:07 PM
சி.கே.அச்சுக்கட்டு: மூட்டையில் கட்டி மாநகராட்சி குப்பை லாரியில் வீசப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் துாரத்தில், 'ஸ்கெட்டிங்' மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் முன்பு மாநகராட்சி குப்பை லாரி நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு லாரியை எடுப்பதற்காக டிரைவர் வந்தார்.
அப்போது லாரியின் குப்பை வாரும் இடத்தில் ஒரு மூட்டை கிடந்தது. அந்த மூட்டையை, டிரைவர் துாக்கினார். 'வெயிட்டாக' இருந்ததால் துாக்க முடியவில்லை. மூட்டையை பிரித்து பார்த்த போது, பெண்ணின் உடல் இருந்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவர், சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை 1:00 மணியளவில் லாரியின் அருகில் ஆட்டோ வந்து நின்றதும், ஆட்டோவில் இருந்து பெண் உடல் இருந்த மூட்டையை ஒருவர் துாக்கி சென்று, குப்பை லாரியில் போடும் காட்சிகளும் இருந்தன. ஆனால் அந்த நபரின் முகம் சரியாக தெரியவில்லை.
பெண்ணை வேறு எங்கேயோ கொலை செய்து, உடலை இங்கு வீசி சென்றதும் தெரியவந்தது. இறந்து கிடந்த பெண், ஒரு நிறுவனத்தின் பெயரிலான டி - சர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தார். உள்ளாடைகள் எதுவும் அணியாததால், அவரை மர்மநபர்கள் பலாத்காரம் செய்து கொன்று இருக்கலாம் என்றும், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
சம்பவ இடத்திற்கு மேற்கு மண்டல இணை கமிஷனர் வம்சி கிருஷ்ணா நேற்று காலை சென்றார். லாரி டிரைவரிடம் விசாரித்தார்.
பின், அவர் கூறுகையில், ''கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு 25 முதல் 30 வயது இருக்கும். அவரை வேறு எங்கேயோ கொன்று, உடலை எடுத்து வந்து மாநகராட்சி லாரியில் வீசி உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க, இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணை துவங்கி இருப்பதால், வேறு எந்த தகவலும் இப்போது கூற முடியாது,'' என்றார்.