/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் அமைச்சர் ஆசை எப்போது தான் ஓயும்?
/
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் அமைச்சர் ஆசை எப்போது தான் ஓயும்?
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் அமைச்சர் ஆசை எப்போது தான் ஓயும்?
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் அமைச்சர் ஆசை எப்போது தான் ஓயும்?
ADDED : ஜூன் 04, 2025 12:59 AM
'அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்' என, தகவல் வெளியான நிலையில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் இம்மாதம் 6ம் தேதி, டில்லிக்கு செல்ல தயாராகின்றனர். இதனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சர் பதவி மீதான ஆசை துளிர் விட்டுள்ளது.
கர்நாடக அமைச்சரவையில், தற்போது நாகேந்திராவின் ராஜினாமாவால் காலியான ஒரு இடம் காலியாக உள்ளது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததால், நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. இவரால் காலியான ஒரு இடத்துக்கு, பலர் போட்டி போடுகின்றனர்.
காலியான ஒரு இடத்தை நிரப்புவதுடன், சரியாக பணியாற்றாத, ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட, விவாதங்களில் சிக்கிய சில அமைச்சர்களை நீக்கிவிட்டு, திறமையான, சுறுசுறுப்பான எம்.எல்.ஏ.,க்களை அமைச்சரவையில் சேர்த்து, அமைச்சரவைக்கு புத்துயிர் கொடுக்க முதல்வர் சித்தராமையா விரும்புகிறார்.
நீக்க வேண்டிய அமைச்சர்கள், புதிதாக சேர்க்கப்பட வேண்டியவர்கள் பட்டியலை எடுத்து கொண்டு, பல முறை டில்லிக்கு சென்று வந்தார். ஆனால் தற்போதைக்கு அமைச்சரவையை மாற்ற வேண்டாம் என, காங்கிரஸ் மேலிடம் கூறிவிட்டது.
அமைச்சர் பதவி கேட்டு, யாரும் டில்லிக்கு வர தேவையில்லை என, மேலிடம் 'கட் அண்ட் ரைட்'டாக கூறி விட்டது. மேலிடம் அனுமதி அளிக்காததால், அமைச்சர் பதவி எதிர்பார்த்த எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போதைக்கு அமைச்சரவை மாற்றி அமைக்க வாய்ப்பில்லை. பதவி கிடைக்காது என, கருதி மவுனமாகி விட்டனர்.
அரசுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வரும் 6ம் தேதி முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் டில்லி செல்கின்றனர். பதவி எதிர்பார்க்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, மீண்டும் ஆசை துளிர் விட்டுள்ளது. டில்லி செல்லும் இருவரையும் சந்தித்து தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி மன்றாடுகின்றனர். மற்றொரு பக்கம் பதவி பறிபோகும் என்ற கலக்கத்தில் உள்ள சில அமைச்சர்கள், பதவியை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று முன்தினம் பெங்களூரு வந்த போது, சில அமைச்சர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர். தங்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கூடாது; மற்றொரு வாய்ப்பு அளித்தால், சிறப்பாக பணியாற்றுகிறோம் என, வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேல்சபை மூத்த உறுப்பினர் ஹரிபிரசாத்தை, அமைச்சரவையில் சேர்த்து கொண்டு, மேல்சபை காங்., குழு தலைவராக நியமிக்க, முதல்வர் சித்தராமையா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.எல்.சி.,யுமான அமைச்சர் போசராஜுவின் பதவி பறிபோகும் வாய்ப்புள்ளது.
அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சரான லட்சுமி ஹெப்பால்கர், பெலகாவி மாவட்ட அரசியலை, தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். மூத்த அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் கை ஓங்க விடாமல் பார்த்துக்கொள்கிறார். எனவே லட்சுமி ஹெப்பால்கரின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், அவரை நீக்கி விட்டு, வேறொரு பெண் எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என, சதீஷ் ஜார்கிஹோளி மறைமுகமாக முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
உள்ளாட்சி துறை அமைச்சர் ரகீம் கான், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, கலால் துறை அமைச்சர் திம்மாபூர், சிறிய தொழிற் துறை அமைச்சர் சரண பசப்பா உட்பட சிலர், அமைச்சர் பதவி பறிபோகும் பீதியில் உள்ளனர். அமைச்சர் பதவிக்காக பழைய எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி புதிய எம்.எல்.ஏ.,க்களும் முட்டி மோதுகின்றனர்.
- நமது நிருபர் -