/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடுத்த தேர்தலில் எந்த தொகுதி? ம.ஜ.த., நிகில் குமாரசாமி அறிவிப்பு
/
அடுத்த தேர்தலில் எந்த தொகுதி? ம.ஜ.த., நிகில் குமாரசாமி அறிவிப்பு
அடுத்த தேர்தலில் எந்த தொகுதி? ம.ஜ.த., நிகில் குமாரசாமி அறிவிப்பு
அடுத்த தேர்தலில் எந்த தொகுதி? ம.ஜ.த., நிகில் குமாரசாமி அறிவிப்பு
ADDED : பிப் 04, 2026 06:12 AM

ம.ஜ.த., இளைஞர் அணி மாநில தலைவர் நிகில் குமாரசாமி, சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை அறிவித்து உள்ளார்.
லோக்சபா, சட்டசபைக்கு நடந்த தேர்தல்களில், ம.ஜ.த., சார்பில் போட்டியிட்ட நிகில் குமாரசாமி, தொடர் தோல்வியை சந்தித்தார். ஆனாலும், கட்சியை பலப்படுத்தும் பணியில் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
கடந்த சில நாட்களாக நிகில் குமாரசாமி, சாம்ராஜ் நகர் லோக்சபா அல்லது சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தன.
இந்நிலையில், சிக்கமகளூரில் நிகில் குமாரசாமி கூறியதாவது:
ராம்நகர் மாவட்டம், என் தந்தையின் கர்மபூமி. 1994ல் ஹாசனில் இருந்து வந்த எங்கள் தாத்தா முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, அரசியல் மறுபிறவி அளித்த புனித பூமி. எனவே அத்தகைய மண்ணை விட்டு நான் எங்கும் செல்லமாட்டேன்.
ராம்நகர் மாவட்டத்தில் என்னை நம்பும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.
எங்கள் தலைவரையும், கட்சியையும் நேசிக்கும் மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவர்களை கைவிட்டு, வேறு தொகுதிக்கு குடிபெயர முடியாது. வேறு தொகுதியில் போட்டியிடும் பேச்சுக்கே இடமில்லை.
சமீப காலங்களாக மாவட்டத்தில் கட்சியில் சிறிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம்.
கடந்த நான்கு தேர்தல்களிலும் ராம்நகர் மக்கள் எங்களை கைவிடவில்லை. ஆனால் சில நேரங்களில் முடிவுகள் மாறலாம். அதை சமநிலையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ராம்நகர் மாவட்ட வளர்ச்சிக்கு, தேவகவுடா குடும்பத்தினர் முழு முயற்சி எடுத்துள்ளனர். நீர்ப்பாசனம், சாலை மேம்பாடு உட்பட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, நாங்கள் உண்மையாக உழைத்து உள்ளோம். வரும் நாட்களில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம்.
ஜாதி கணக்கெடுப்பு, சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சியின் நலனுக்காக மட்டுமே நடத்தப்பட வேண்டும். அது ஒரு அரசியல் தந்திரமாக இருகக்கூடாது. அரசின் குறைபாடுகள், பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, மக்களை தவறாக வழிநடத்த இதுபோன்ற பிரச்னைகளை முன்னிலைப்படுத்துவது சரியல்ல.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வரவேற்கிறோம்; அதேவேளையில் அந்த அறிக்கை வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அரசு, அரசியல் நோக்கத்துடன் இதை பயன்படுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:

