/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புகழுக்கு அடிமையாவது ஏன்? ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் வருத்தம்!
/
புகழுக்கு அடிமையாவது ஏன்? ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் வருத்தம்!
புகழுக்கு அடிமையாவது ஏன்? ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் வருத்தம்!
புகழுக்கு அடிமையாவது ஏன்? ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் வருத்தம்!
ADDED : ஜூலை 28, 2025 05:51 AM

பெங்களூரு தெற்கு, : ''சில நீதிபதிகள் புகழுக்கு அடிமையாகி விட்டனர். அவர்களின் குழந்தைகளை, யாராவது அடித்தால், இரண்டு மாதம் ஜாமின் தருவரா,'' என, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் வருத்தம் தெரிவித்தார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகரில் நேற்று முன்தினம் நடந்த மாநில பார் கவுன்சில் மற்றும் மாவட்ட பார் அசோசியேஷன் இணைந்த நடத்திய சட்ட பயிலரங்கத்தில், நீதிபதி சந்தேஷ் பேசியதாவது:
சில நீதிபதிகள் புகழுக்கு அடிமையாகி விட்டனர். அவர்களின் குழந்தைகளை, யாராவது அடித்தால், இரண்டு மாதம் ஜாமின் கொடுப்பார்களா. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால், சமூகத்தை யார் கவனிப்பர். வழக்கு தொடருவோர் உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கே சிரமப்படும் போது, அவர்களில் எத்தனை பேர் உச்சநீதிமன்றம் செல்ல முடியும்.
மக்களே கடவுள் நீதி தேடி வரும் மக்களே எங்களின் கடவுள். கடவுளுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நீதித்துறை பயனற்றது. நீதித்துறை மீது சாதாரண மக்கள் அதிருப்தி அடையாத வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
இன்று நாடு ஒரு மாற்றத்தை சந்தித்து வருகிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கும், சமூக மாற்றத்துக்கும் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாமும் சமூக பொறுப்பாளர்கள் என்பதை வக்கீல்கள் மறந்து விட்டனர். பண பலத்தால் பாதிக்கப்பட்ட இத்தொழிலின் பின்னால், அனைவரும் பின் தொடர்கின்றனர். நான் ஒருபோதும் பணத்தை துரத்தியதில்லை.
ஒரு விவசாயி மகனான நீ, லட்சுமியின் பின்னால் செல்லாமல், சரஸ்வதியின் பின்னால் செல்ல வேண்டும். 1992ல் நான் வக்கீல் பணியை துவங்கியபோது, சரஸ்வதி எங்கிருந்தாலும், லட்சுமி கால் உடைந்து கிடக்கிறார் என்று என் சீனியர் வக்கீல் அனந்தராமையா கூறினார்.
நாம் இறக்கும் போது, எதையும் எடுத்து செல்லப்போவதில்லை. வக்கீல்கள், சமூகத்தின் செல்வமாக மாறும்போது தான், அவர்கள் கோடிக்கணக்கில் மதிப்புள்ளவர்களாக மதிக்கப்படுவர். ஆனால் இன்று, மூத்த வக்கீல்கள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
வாழ்க்கை பாழ் வக்கீல்கள் துறவிகள் போன்று வாழ வேண்டும். குதிரைகள் போன்று வேலை செய்ய வேண்டும். ஒரு வக்கீல் வழக்கில் தோற்றால், அவருக்கு மற்றொரு வழக்கு கிடைக்கும். ஒரு வாடிக்கையாளருக்கு நீதி கிடைக்காவிட்டால், அவரது வாழ்க்கை பாழாகிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.