/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டில்லியில் முகாம் ஏன்? பா.ஜ., அசோக் விளக்கம்
/
டில்லியில் முகாம் ஏன்? பா.ஜ., அசோக் விளக்கம்
ADDED : ஜூன் 27, 2025 11:14 PM

“காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை, பா.ஜ., மேலிட தலைவர்களிடம் கூற டில்லிக்கு வந்துள்ளேன்,” என, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறியுள்ளார்.
கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் அசோக், கடந்த 24ம் தேதி காலை டில்லி சென்றார். அவரை தொடர்ந்து பா.ஜ., தலைவர் விஜயேந்திராவும் டில்லி சென்றதால், கர்நாடக பா.ஜ.,வில் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சி, மாநில தலைவர் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. நேற்று முன்தினம் விஜயேந்திரா, பெங்களூரு திரும்பிய நிலையில், அசோக் மட்டும் டில்லியிலேயே இருந்தார்.
டில்லியில் உள்ள, கர்நாடக பவனில் அசோக் நேற்று அளித்த பேட்டி:
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இங்கு வருகிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகள், அரசியல் நிலவரம் குறித்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டில்லி வந்து தெரிவிக்க வேண்டும் என்று, பா.ஜ., மேலிட தலைவர்கள் என்னிடம் கூறி உள்ளனர். இதனால் தற்போது டில்லி வந்துள்ளேன்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், தர்மேந்திர பிரதான், பிரஹலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்து பேசி உள்ளேன்.
பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, கர்நாடக பா.ஜ., முன்னாள் மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோரையும் சந்தித்துள்ளேன். இன்னும் சில மேலிட தலைவர்களை சந்திக்க வேண்டி உள்ளது.
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை மாற்ற வேண்டும் என்று, மேலிடத்தில் எந்த பேச்சும் எழவில்லை. அதற்காக அவரே தலைவராக நீடிப்பாரா என்றும் எனக்கு தெரியாது.
இதுபற்றி கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். விஜயேந்திரா மாற்றுவது பற்றி, என்னிடம் யாரும் பேசவில்லை. தலைவர் மாற்றம் ஏதாவது நடந்தால், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மூலம் எங்களுக்கு தகவல் கிடைக்கும்.
பதவி கொடுப்பது, பறிப்பது எல்லாம் மேலிட தலைவர்கள் முடிவு. கர்நாடகாவில் கொள்ளை அடிக்கும் அரசு உள்ளது.
அரசு மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -