/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திரவுபதி முர்முவை ஏன் பிரதமர் ஆக்கவில்லை? பா.ஜ., வுக்கு சித்தராமையா கேள்வி
/
திரவுபதி முர்முவை ஏன் பிரதமர் ஆக்கவில்லை? பா.ஜ., வுக்கு சித்தராமையா கேள்வி
திரவுபதி முர்முவை ஏன் பிரதமர் ஆக்கவில்லை? பா.ஜ., வுக்கு சித்தராமையா கேள்வி
திரவுபதி முர்முவை ஏன் பிரதமர் ஆக்கவில்லை? பா.ஜ., வுக்கு சித்தராமையா கேள்வி
ADDED : ஜூலை 17, 2025 10:58 PM

பெங்களூரு: 'மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா' என கேள்வி எழுப்பிய, பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு, முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.
'ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஏன் பிரதமர் ஆக்கவில்லை?' என, முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சித்தராமையாவின் 'எக்ஸ்' வலைதள பதிவு:
விஜயேந்திராவின் பா.ஜ., தலைவர் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. தன் நாற்காலியை பாதுகாக்க முடியாதவர், காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்படுவாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் யார் என பரிந்துரைப்பது, விஜயேந்திராவின் அறியாமை, ஆணவத்தை காட்டுகிறது.
அவருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தால், இந்த நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை, பா.ஜ., கட்சி எப்படி நடத்தியது என்ற வரலாற்றை படிக்க வேண்டும்.
முஸ்லிம் எம்.பி.,
தலித் சமூகத்தை சேர்ந்த பங்காரு லட்சுமணன் அப்பாவி நபர். அவரை பா.ஜ., தேசிய தலைவராக ஆக்கியது மட்டுமல்லாமல், ஊழல் குற்றச்சாட்டு கூறி சிறையில் அடைத்து, பதவியை ராஜினாமா செய்ய வைத்தது யார்? பா.ஜ., கட்சியால் பாராட்டப்படும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஏன் பிரதமர் ஆக்கவில்லை?
அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கியது நாங்கள் தான் என்று பெருமையாக பேசும் பா.ஜ.,வுக்கு, லோக்சபாவில் ஒரு முஸ்லிம் எம்.பி., கூட இல்லாதது ஏன்? லோக்சபா தேர்தலில் ஒரு முஸ்லிம் தலைவருக்கு கூட ஏன் சீட் வழங்கவில்லை என்ற கேள்விக்கு, விஜயேந்திராவால் பதில் அளிக்க முடியுமா?
பெயர் பரிந்துரை
பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து கர்நாடக முதல்வர் பதவி வகித்த பங்காரப்பாவை, எடியூரப்பா அரசியல் ரீதியாக முடித்துவிட்டார்.
இப்போது பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா அரசியல் வாழ்க்கையை விஜயேந்திரா முடிக்க பார்க்கிறார்.
தலித், பிற்படுத்தப்பட்டோர் மீது கர்நாடக பா.ஜ.,வினருக்கு அக்கறை இருந்தால், மாநில தலைவர் பதவியை தலித் தலைவருக்கு கொடுங்கள். உங்கள் வசதிக்காக நானே பெயர்களை பரிந்துரைக்கிறேன்.
சித்ரதுர்கா எம்.பி., கோவிந்த் கார்ஜோள் அடிப்படையில் ஒழுக்கமான நபர். உங்களுக்கு பலம் இருந்தால், கோவிந்த் கார்ஜோளை தலைவராக்கி, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
நல்ல வாய்ப்பு
தலித் தலைவர்களுக்கு பா.ஜ., எதுவும் செய்தது இல்லை. தலித் தலைவர்களை பயன்படுத்தி அரசியல் செய்ய மட்டுமே தெரியும். மல்லிகார்ஜுன கார்கே, தலித் தலைவர் மட்டுமல்ல.
இந்த நாட்டு மக்களால் நேசிக்கப்படும் தலைவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, பொது சேவை மூலம், காங்கிரஸ் தேசிய தலைவராக உள்ளார்.
தலித் சமூகத்தை பயன்படுத்தி அவர் அரசியல் செய்தது இல்லை. யாரை பிரதமராக்க வேண்டும் என்பதை, எங்கள் கட்சி தீர்மானிக்கும். அதை பற்றி விஜயேந்திரா கவலைப்பட வேண்டாம்.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் 75 வயதை நிறைவு செய்தவர்கள், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகுவதற்கான சமிக்ஞை வழங்கி உள்ளார்.
தலித் ஒருவரை பிரதமராக்க பா.ஜ.,வுக்கு இது நல்ல வாய்ப்பு. இந்த முயற்சி, பா.ஜ.,விடம் இருந்து துவங்கட்டும்.
விஜயேந்திரா மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு, பிரதமர் பதவிக்கு தலித் தலைவர் பெயரை பரிந்துரை செய்யட்டும்.
கோவிந்த் கார்ஜோள் அல்லது சலவாதி நாராயணசாமி பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டால், முதலில் நானே வாழ்த்து கூறுவேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.